வெள்ளி, 17 ஜனவரி, 2014

நாட்டிலேயே முதல் முறையாக சிசி டி.வி. கண்காணிப்பில் இயங்கும் புதுவை போலீஸ்

புதுச்சேரி: நாட்டிலேயே முதல் முறையாக சிசி டி.வி கண்காணிப்பில் புதுவை யில் உள்ள பெரியக்கடை காவல்நிலையம் இயங்கத் தொடங்கியுள்ளது.
புதுவை நேருவீதியில் அமைந்துள்ளது பெரியக்கடை காவல்நிலையம். நகரின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள இக்காவல்நிலையத்தில் 8 இடங்களில் சிசி டி.வி கேமரா தற்போது பொருத்தப்பட்டுள்ளது. நுழைவாயிலில் 2 கேமராக்களும் வரவேற்பு அறை, தலைமை காவலர் அறை, உதவி ஆய்வாளர் அறை, கைதிகள் அடைக்கப்படும் லாக் அப், மேல்தளத்தில் உள்ள ஆய்வாளர் அறை என 8 இடங்களிலும் கேமரா அமைக்கப்பட்டுள்ளன.
கேமரா மூலம் பதிவாகும் அனைத்து காட்சிகளும் உள்ளே உள்ள தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம். அத்துடன் இணைய வசதி மூலம் காவல்நிலையத்தில் நடப்பதை காவல்துறை கண்காணிப்பாளர் (வடக்கு) பிரவீண்குமார் திரிபாதி, ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் சஜீத் ஆகியோர் பார்க்கவும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆய்வாளர் பாஸ்கரன் கூறியதாவது:
’’நாட்டிலேயே முதல்முறையாக இம்முறையை பெரியக்கடை காவல்நிலையத்தில் செயல்படுத்து கிறோம். காவல்நிலையத்தில் நாங்கள் இல்லாதபோதும் அங்கு நடப்பது சிசி டி.வி கேமராவில் பதிவாகும். மேலும், இணையத்தின் மூலம் எஸ்.பி, ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் செல்போனில் காவல்நிலையத்தில் நடப்பதை பார்க்க முடியும். இதற்கு தனி ரகசிய குறியீடு எங்கள் 3 பேருக்கும் தரப்பட்டுள்ளது.
வெளிப்படையான காவல் நிலையம் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே இம்முறையை புதுவை காவல்துறையில் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டார். முக்கியமான காவல்நிலையங்களில் கேமரா மூலம் கண்காணிக்கும் இந்தப் பணியை டி.ஜி.பி. காமராஜ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக