சனி, 4 ஜனவரி, 2014

மாவட்டத்தில் சராசரி அளவை விட மழை..குறைவு ...! நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் வடிகால் பகுதியாக அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

மொத்த நிலப்பரப்பில் 5 லட்சத்து 38 ஆயிரத்து 460 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர், பல்வேறு நதிகளாக பெருக்கெடுத்து கடலூர் மாவட்டத்தை செழிப்பாக்கி விட்டு, இறுதியில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது.இவ்வாறு பெருக்கெடுத்து வரும் மழை நீர் காரணமாக வீராணம், பெருமாள், வெலிங்டன், வாலாஜா உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி, மாவட்டத்தில் நவரை, குறுவை, சம்பா ஆகிய முப்போக நெல் சாகுபடிக்கு கைகொடுத்து வந்தது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழையே மாவட்டத்தின் ஓராண்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.மாவட்டத்தில் கடந்த 1984ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தில் எடுத்த கணக்கின்படி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை 1,309 மி.மீ., ஆகும்.

அதில் குளிர் காலமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 36.8 மி.மீ., அளவும், கோடை காலமான மார்ச் முதல் மே வரையில் 71.9 மி.மீ., ஆகும்.

அதேப்போன்று தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களில் 392.4 மி.மீ. அளவும், வடகிழக்கு பருவ மழைக்காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை 773.7 மி.மீ., மழை பெய்ய வேண்டும்.

ஆனால், கடந்த 2012ம் ஆண்டு சராசரியில் 54 சதவீதமான 713.2 மீ.மீ., அளவும், கடந்தாண்டில் சராசரியில் 75 சதவீதமான 990 மி.மீ., அளவே மழை பெய்துள்ளது. குறிப்பாக, எதிர்வரும் கோடை காலத்திற்கான தண்ணீர் தேவையை ஈடுகொடுக்க வேண்டிய வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் மொத்த அளவில் 59.36 சதவீதமான 459.31 மி.மீ., அளவே மழை பெய்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், எதிர்வரும் குறுவை சாகுபடியை செய்ய முடியுமா என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.



2012 2013

----------------------------------------------------

பருவம் மாதம் சராசரி மழை அளவு மழை அளவு

செ.மீ., செ.மீ., செ.மீ.,

----------------------------------------------------

குளிர் ஜனவரி 10.90 3.80 0.00

பிப்ரவரி 36.80 0.00 14.10

----------------------------------------------------

கோடை மார்ச் 2.28 4.80 29.20

ஏப்ரல் 21.50 2.88 2.35

மே 71.90 24.25 24.00

----------------------------------------------------

தென் ஜூன் 70.10 2.34 49.90

மேற்கு ஜூலை 76.90 52.31 27.90

ஆகஸ்ட் 116.00 55.96 259.70

செப்டம்பர் 129.40 98.28 123.50

----------------------------------------------------

வட அக்டோபர் 226.40 361.20 134.64

கிழக்கு நவம்பர் 330.40 92.78 232.86

டிசம்பர் 216.90 14.60 91.81

----------------------------------------------------

மொத்தம் 1309.40 713.20 990.00

0 கருத்துகள்:

கருத்துரையிடுக