கடலூர்:கடலூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டார். 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 18 லட்சத்து 59 ஆயிரத்து 749 வாக்காளர்கள் உள்ளனர்.
2014-ம் ஆண்டுக்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய சிறப்பு சுருக்கமுறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாக்காளர் பட்டியலின் நகலை வழங்கினார்.
இதில் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குமார் என்கிற குமரன், தி.மு.க. சார்பில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அகரம் நாராயணசாமி, பா.ஜ.க. சார்பில் துறைமுகம் செல்வம், தே.மு.தி.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் மாதவன், நகர செயலாளர் சுப்புராயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கலெக்டர் கிர்லோஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளரின் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அந்த வாக்காளர் பட்டியலில் உள்ளவாறு கடலூர் மாவட்டத்தில் அப்போதைய மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 72 ஆயிரத்து 990 ஆகும்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோரது அறிவுரைகளின் படி 1-1-2014 தேதியை தகுதி நாளாக கொண்டு புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்களை பெறும் பணி கடலூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது.
இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக 95 ஆயிரத்து 443 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 87 ஆயிரத்து 961 மனுக்கள் ஏற்கப்பட்டு, 7,482 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீக்குதல் தொடர்பாக பெறப்பட்ட 1,259 மனுக்களில் 1,051 மனுக்கள் பெறப்பட்டன, 208 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதேபோல திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட 14 ஆயிரத்து 268 மனுக்களில் 12 ஆயிரத்து 73 மனுக்கள் ஏற்கப்பட்டு, 2 ஆயிரத்து 195 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொகுதிக்குள் இடம் மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட 4 ஆயிரத்து 985 மனுக்களில் 3,605 மனுக்கள் பெறப்பட்டு, 1,380 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் நேரடி விசாரணை செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டவாறும், இதர விசாரணைகளின்படியும் இறந்து விட்ட வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இறப்பு காரணமாக 94 பேர், இடம் பெயர்வு காரணமாக 1,000 பேர், இரட்டைப் பதிவு செய்துள்ள 108 பேர் என மொத்தம் 1,202 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன.
இன்று(அதாவது நேற்று) வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 59 ஆயிரத்து 749 ஆகும். இதில் 9 லட்சத்து 37 ஆயிரத்து 5 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 22 ஆயிரத்து 702 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 42 பேரும் உள்ளனர். இதில் புதிதாக 86 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தற்போது உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை தொகுதி வாரியாக: திட்டக்குடி (தனி): மொத்தம் 1,94,916. ஆண்கள் 97,844. பெண்கள் 97,072. விருத்தாசலம்: மொத்தம் 2,16,320. ஆண்கள் 1,09,997. பெண்கள் 1,06,319. நெய்வேலி: மொத்தம் 1,87,180. ஆண்கள் 95,300. பெண்கள் 9,1872. பண்ருட்டி: மொத்தம் 2,12,752. ஆண்கள் 1,05,769. பெண்கள் 1,06,976. கடலூர்: மொத்தம் 2,09,828. ஆண்கள் 1,03,212. பெண்கள் 1,06,598. குறிஞ்சிப்பாடி: மொத்தம் 2,05,957. ஆண்கள் 1,04,053. பெண்கள் 1,01,903. புவனகிரி: மொத்தம் 2,23,739. ஆண்கள் 1,13,529. பெண்கள் 1,10,250. சிதம்பரம்: மொத்தம் 2,12,138. ஆண்கள் 1,06,044. பெண்கள் 1,06,093. காட்டுமன்னார்கோயில் (தனி): மொத்தம் 1,96,879 . ஆண்கள் 1,05,257, பெண்கள் 95,619. மாவட்ட மொத்த வாக்காளர்கள் 16,76,117. ஆண்கள் 8,52,305. பெண்கள் 8,23,812.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக