ஞாயிறு, 19 ஜனவரி, 2014

சிதம்பரம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக பஸ்கள் நிறுத்தம் போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் அவதி

சிதம்பரம்:பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்பட்ட பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.
சிதம்பரம் தென், வட மாவட்டங்களை இணைக்கும் பிரதான பஸ் நிலையமாக இருப்பதால் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்தில் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும் பஸ்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டாலும், அதனை டிரைவர்கள் சரியாக கடைபிடிப்பது இல்லை.
பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போலீஸ்காரர்களும் இதனைக் கண்டுக்கொள்வது இல்லை. இதனால் பஸ் பயணிகள், பொதுமக்கள் அவதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பஸ் நிலையத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு சென்னை, கடலூர் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் அதிக அளவாக பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. வெகு நேரம் சென்று டைம் எடுக்கும் பஸ்களும் வரிசைக்கட்டி நிறுத்தப்பட்டதால், பஸ் நிலையம் நுழைவு வாயில் வரை சென்னை செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
அதனால், பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டன. 30க்கும் மேற்பட்ட பஸ்கள் வேணுகோபால் பிள்ளைத் தெருவில் நின்றதால் 30 நிமிடத்திற்கும் மேல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.
பஸ் டிரைவர்களின் மெத்தனத்தால் பஸ் நிலையம் பகுதியில் அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பஸ் நிலையம் அருகில் வணிக நிறுவனங்கள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பஸ் நிலையம் கண்காணிப்பு பாதுகாப்புக்கு என போலீஸ் ஒதுக்கப்படுவது இல்லை.
புறக்காவல் நிலையத்திற்கு நியமிக்கப்படும் போலீஸ்காரர்கள் தங்கள் சொந்த வேலையை பார்க்க சென்று விடுகின்றனர். பஸ் நிலையம் பகுதியில் இதுபோன்று அடிக்கடி போக்குவரத்து தடைபடுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக