ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் முதல்வருக்கு மா.கம்யூ., எம்.எல்.ஏ., மனு

கடலூர்:கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதைத் தடுத்திட கொள்ளிடம் மற்றும் வெள்ளாறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என மா.கம்யூ., எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முதல்வர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு:
காவிரியின் வடிகாலாக உள்ள கொள்ளிடம் ஆற்றில், கடல் முகத்துவாரத்திலிருந்து 40 கி.மீ., தூரம் வரை கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் முழுமையாக உவர் நீராக மாறி வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 25 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் சாகுபடி பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. மேலும், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளும் உவர் நீராக மாறுவதால் குடிநீராக பயன்படுத்த முடியவில்லை.
கொள்ளிடம் ஆற்றிலிருந்து 10க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பல்வேறு பகுதிகளில் உள்ள 75 லட்சம் பேருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடல் நீர் உட்புகுவதால் இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயலற்றதாக மாறும் ஆபத்து உள்ளது.
விவசாயம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் புகுவதைத் தடுப்பது அவசரமானது மட்டுமல்ல, அவசியமானதும் கூட.
எனவே, இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து, கொள்ளிடம் ஆற்றில், கொள்ளிடம் பாலத்திற்கு அருகிலேயே தடுப்பணை கட்ட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேப்போன்று வெள்ளாற்றிலும் கடல் நீர் உட்புகுந்து சேத்தியாத்தோப்பு வரை நிலத்தடி நீர் உவர் நீராக மாறி விட்டதால் அப்பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீரும் பாதிப்பிற்குள்ளாகி வருவதைத் தவிர்த்திட, வெள்ளாற்றின் குறுக்கே தீர்த்தாம்பாளையம் மற்றும் சி.முட்லூர் அருகே தடுப்பணைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக