புதன், 1 ஜனவரி, 2014

ஜவுளிப் பூங்கா: கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தக் கோரிக்கை

பரங்கிப்பேட்டை:ஜவுளிப் பூங்கா அமைக்கும் முன் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கடலூர் மாவட்டம்,பரங்கிப்பேட்டை அடுத்து பெரியப்பட்டு அருகே ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள், கழிவுநீரை கடலில் கலப்பதற்கான குழாய் அமைக்கும் பணிகள் உள்ளிட்டப் பணிகள்  தொடங்கப்பட்டுள்ளன.
 இதுபோன்ற தொழிற்சாலைகள் துவங்குவதற்கு முன்பாக அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்த வேண்டும். அதுபோல் தொழிற்சாலை நிர்வாகமும் சுற்றுச்சூழலுக்கான மதிப்பீட்டை பொதுமக்கள் மத்தியில் சமர்பிக்க வேண்டும்.
 ஆனால் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, அப்பகுதி அருகில் உள்ள கிராமங்களான பெரியபட்டு, பெரியாண்டிக்குழி, சின்னாண்டிகுழி, கோபாலபுரம், ஆண்டார்முள்ளிபள்ளம், காயல்பட்டு, புத்திரவெளி, தாழஞ்சாவடி, வாண்டையாம்பள்ளம், தச்சம்பாளையம், சிலம்பிமங்கலம், நைனார்குப்பம், ரெட்டியார்பேட்டை, அய்யம்பேட்டை, மடவாபள்ளம், குமாரபேட்டை, சாமியார்பேட்டை, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கடலூரில் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமாரை முகாம் அலுவலகத்தில் சனிக்கிழமை சந்தித்து தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக உரிய நடைமுறைகள், விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.
 ஆட்சியரை சந்தித்த பிரதிநிதிகள் ராஜேஷ்பாபு, ராதாகிருஷ்ணன், கண்ணன், ராமலிங்கம், பிரேம்நாத், கருணைசெல்வம், வைத்தியலிங்கம் ஆகியோர் கூறியதாவது:
 12 ஆழ்துளை கிணறுகள் மூலம் தினமும் ஒன்றரை கோடி நிலத்தடி நீரை உறிஞ்ச திட்டமிட்டுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாலைவனமாக மாறும். இதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை.
இதுபோல் பெரியப்பட்டு சாலை, வாண்டியாம்பள்ளம் சாலை, பெரியாண்டிகுழி சாலை ஆகியவற்றையும் ஆங்காங்கே வெட்டி சேதப்படுத்துகின்றனர்.  கடலில் சாய கழிவுநீர் கலப்பதால், மீன்வளம் அடியோடு பாதிக்கப்படும் என்ற அச்சம் மீனவ மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
 இக் கோரிக்கைகளை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார் என்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக