புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, டெல்லியில் ஜனவரி 1 முதல் தினமும் வீட்டு உபயோகத்திற்கு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 667 லிட்டர் தண்ணீர் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில், அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து டெல்லி குடிநீர் வாரியத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாக அதிகாரி விஜய் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வீட்டு உபயோகத்திற்காக மீட்டர் இணைப்பு வைத்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ஜனவரி 1 முதல் மாதம் தோறும் 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இந்தத் தண்ணீருக்கு எந்த வகையிலும் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது” என்றார். அதேவேளையில், 20,000 லிட்டர் என்ற அளவைத் தாண்டினால், மொத்தமாக எத்தனை லிட்டர் பயன்படுத்தப்பட்டதோ அத்தனை லிட்டருக்கும் அதற்குரிய கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். டெல்லி அரசின் தற்போதைய முடிவு குறித்து 3 மாதங்களுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நாளைக்கு 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆம் ஆத்மி அரசு முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, நிதி நெருக்கடி காரணமாக, ஜனவரியில் இருந்து தண்ணீர் கட்டணத்தில் 10 சதவீதத்தை உயர்த்துவது என டெல்லி குடிநீர் வாரியம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரவுடிகளின் தாக்குதலில் உயிரிழந்த காவலருக்கு ரூ. 1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சமீப காலத்தில், இத்தகைய நிகழ்வுக்கு இதுபோன்ற அதிக தொகை இழப்பீடு மாநில அரசால் தரப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தெற்கு டெல்லியில் சாராய கடத்தல் கும்பலால் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டு, 48 வயது டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் வினோத் குமார் உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்த வினோத் குமாரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீட்டை முதல்வர் கேஜ்ரிவால் நேற்று வழங்கினார். அத்துடன், வினோத் குமாரின் மனைவிக்கு அவர் எழுதிய கடிதத்தில், வினோத் குமாரின் உயிர்த் தியாகம் பற்றி குறிப்பிட்ட அரவிந்த் கேஜ்ரிவால், இந்த இழப்பீட்டுத் தொகையுடன் உங்கள் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும்டெல்லியில் 400 யூனிட்டுகள் வரை மின்சாரம் நுகரும் வாடிக்கையாளருக்கு அதற்குரிய கட்டணத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இக் கட்டணச் சலுகை புதன்கிழமை (ஜனவரி 1) முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவர் கூறினார். டெல்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “டெல்லியில் 34,64,000 மின் நுகரும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதில் 28 லட்சம் வாடிக்கையாளர்கள் 400 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் நுகர்வோர் ஆவர். அவர்கள் செலுத்தும் மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை மானியமாக வழங்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பால் டெல்லி அரசுக்குக் கூடுதலாக ரூ. 200 கோடி செலவாகும். இதில் ரூ. 61 கோடி டாடா பவர் நிறுவனத்துக்கும், மீதமுள்ள ரூ. 139 கோடி, பி எஸ் இ எஸ் யமுனா, ராஜ்தானி ஆகிய இரு நிறுவனங்களும் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ. 4,000 கோடி நிலுவைத் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். மின்சார கட்டணத்துக்கான அரசு மானியம், மின் விநியோக நிறுவனங்களிடம் இனி வழங்கப்படாது. அத் தொகையை மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்திர பிரஸ்தா, பிரகதி, டெல்லி டிரான்ஸ்கோ ஆகிய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேரடியாக டெல்லி அரசே வழங்கும். டெல்லியில் மின்சாரம் விநியோகிக்கும் மூன்று தனியார் நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்வது அவசியம். இது குறித்து தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) சசிகாந்த் சர்மாவுடன் ஆலோசனை நடத்தினேன். தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு மானியமாக கோடிக்கணக்கான ரூபாய் நிதியை அரசு ஒதுக்கி வருகிறது. எனவே, அதன் கணக்குகளைத் தணிக்கை செய்ய ஆட்சேபம் இல்லை என்று சசிகாந்த் சர்மா கூறினார். எனவே, அதற்கு ஒப்புதல் தெரிவிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. டெல்லியில் மின்சாரம் விநியோகிக்கும் மூன்று தனியார் நிறுவனங்களின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை புதன்கிழமை அவற்றின் தலைவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, அந் நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கை மீது மீண்டும் டெல்லி அமைச்சரவை கூடி விவாதிக்கும். அதன் பிறகு, அதன் கணக்குகளை சிஏஜி தணிக்கை செய்வார். அதற்கு ஏதுவாக துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க டெல்லி அரசு கேட்டுக் கொள்ளும்.” இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக