வியாழன், 2 ஜனவரி, 2014

பரங்கிப்பேட்டை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி: 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைஅருகே சாமியார்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55) மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த அண்ணன்–தம்பிகளான ரவி, மருதப்பிள்ளை, ஏழுமலை ஆகியோருடன் இன்று அதிகாலை ஒரு விசைப்படகில் கடலில் மீன் பிடிக்க சென்றார்.
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில் படகின் அடியில் நடராஜன் சிக்கி கொண்டார். உடனடியாக மற்ற 3 மீனவர்களும் அபயக்குரல் எழுப்பினர். இதையடுத்து அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து படகின் அடியில் சிக்கிய நடராஜனையும், கடலில் தத்தளித்து கொண்டிருந்த மற்ற 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நடராஜன் பரிதாபமாக இறந்துபோனார். இதைத் தொடர்ந்து ரவி, மருதப்பிள்ளை, ஏழுமலை ஆகிய 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து நடராஜன் உடலை பார்வையிட்டு அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மற்ற 3 மீனவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக