கடலூர்:கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 31ஆம் தேதி முடிய வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 359 முறை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.இதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், அதிக பாரம், அதிக பயணிகளை ஏற்றுதல், படிக்கட்டில் பயணம் செய்தது, செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டியது மற்றும் வரி செலுத்தாதவர்கள், எப்.சி. ஆய்வு முடிக்காமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை மீறியவர்கள் மீது 5,283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆய்வின் போது வரி மற்றும் அபராதமாக ரூ.2 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரத்து 313 வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 42 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த 73 ஓட்டுநர்களின் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு 3,882 விபத்துகளில் 458 பேர் இறந்துள்ளனர். 2013ஆம் ஆண்டுடில் 4,066 விபத்துகளில் 432 பேர் இறந்துள்ளனர்.
விபத்துகளைத் தடுக்க ஓட்டுநர்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து நடந்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், 5 பேருக்கு மேல் ஏற்றப்படும் ஆட்டோக்களில், குழந்தைகளை அனுப்பாமலும், பள்ளி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்பி விபத்துகளைத் தவிர்க்க உதவ வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக