புதன், 22 ஜனவரி, 2014

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களுக்கு வருகிற 25–ந் தேதி வாக்காளர் அடையாள அட்டை கலெக்டர் தகவல்

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களுக்கு வருகிற 25–ந் தேதி வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம்,திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களையும் அளிக்கலாம் என்று கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வாக்காளர் பட்டியல் வெளியீடு
கடந்த 1–10–2013 முதல் 31–10–2013 வரையிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்த காலத்தில் 1–1–2014 தேதியை தகுதி நாளாக கொண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 10–1–2014 அன்று வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வெளியிடப்பட்டன.
அதையடுத்து கடந்த 10–1–2014 முதல் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தமுறை நடைபெற்று வருகிறது. ஆகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் விடுபட்ட வாக்காளர்கள் யாராவது இருந்தால் அவர்கள் தங்களது விண்ணப்பங்களை தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் வேலைநாட்களில் அளித்திடலாம். மேலும் பெயர்நீக்கம், வாக்காளர் விவரங்களில் திருத்தம் மற்றும் தொகுதிக்குள் முகவரி மாற்றம் ஆகியவை குறித்தும் உரிய விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
முகவரியை குறிப்பிட வேண்டும்
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோரது அறிவுரைகளின்படி,நடப்பு வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த, காலத்தில் பெறப்படும் பெயர் சேர்த்தல் விண்ணப்பபடிவமான படிவம் 6–யை முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும். குறிப்பாக படிவம் 6–ன் கலம் 4–ல் மனுதாரரது முந்தைய முகவரியை தவறாமல் எழுதிட வேண்டும்.
இதேபோல் 18–வயது பூர்த்தி அடைந்து முதன் முறையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட விண்ணப்பித்திடும் வாக்காளர்களும் தங்களது தற்போதைய முகவரியை தவறாமல் குறிப்பிட வேண்டும். இவ்வாறு குறிப்பிடாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கடந்த 10–1–2014 அன்று வெளியிடப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 19 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டையினை விரைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அடையாள அட்டை வழங்கப்படும்
18–19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான வருகிற 25–ந் தேதி மாவட்ட அளவிலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தின விழாவின் போது வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக