திங்கள், 20 ஜனவரி, 2014

பரங்கிப்பேட்டை அருகே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால் 1000 ஏக்கர் நெற்பயிர் கருகும் அவலம்



பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே பாசன வாய்க்காலில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் திறந்துவிடாததால் 1000 ஏக்கரில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர்.
டெல்டா பாசனத்தின் கடை மடை பகுதியான பரங்கிப்பேட்டை ஒன்றிய கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் அரியகோஷ்டி வாய்க்கால் முலம் பாசனம் பெற்று வருகிறது. இப்பகுதியில் பெரும் பாலான விவசாயிகள் நேரடி விதைப்பு செய்துள் ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அரிய கோஷ்டி வாய்க்காலில் வந்த தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் நெற்பயிரை காப்பாற்றி, களை எடுத்து உரம், பூச்சிமருந்து தெளித்து வந்ததால் நெற்பயிர் நன்கு வளர்ந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் அரியகோஷ்டி வாய்க்காலில் சுமார் அரை அடி அளவே தண்ணீர் வந்தது. இதனை வயலுக்கு பாய்ச்ச முடியாததால் நெற்பயிர்கள் கருகத் துவங்கின.
ஆவேசமடைந்த அரியகோஷ்டி உள்ளிட்ட நான்கு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அரியகோஷ்டி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி கடந்த மாதம் பு.முட்லூரில் சாலை மறியல் செய்ய முயன்றனர். அதனைத் தொடர்ந்து அரியகோஷ்டி வாய்க்காலில் சில நாட்கள் போதுமான அளவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. விவசாயிகள் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினர். தற்போது நெற்பயிர்கள் கதிர் வந்த நிலையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அரியகோஷ்டி வாய்க்காலில் குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டுக்கொள்ளவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
விவசாயிகளின் நலன்கருதி அரியகோஷ்டி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயி பரமசிவம் கூறுகையில், இந்தாண்டு அதிகளவு நேரடி நெல் விதைப்பும், நடவு பயிரும் செய்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக அரியகோஷ்டி வாய்க்காலில் தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
வீராணத்தில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அரியகோஷ்டி வாய்க் காலில் தண்ணீர் திறக்க அதிகாரிகள் மறுப்பது வேதனையாக உள்ளது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக