திங்கள், 20 ஜனவரி, 2014

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு

சென்னை:திங்கள்கிழமை (ஜனவரி 20) முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி இருப்பதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக பால் முகவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் மூலப்பொருள்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி ஜனவரி 20-ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 விலையை உயர்த்துவதாக, ஆந்திரத்தைச் சேர்ந்த திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி போன்ற பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளன. ஏற்கெனவே, இதே காரணங்களைக் கூறி கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி ரூ.2 விலை உயர்த்தப்பட்டது.
இந்த பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
ஆந்திரத்தைச் சேர்ந்த திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகிய 4 தனியார் பால் நிறுவனங்களும், பால் விலையை உயர்த்துவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த நிறுவனங்களே தமிழகத்தில் அதிகமாக பால் விநியோகம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களும் முகவர்களுமே.
தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு பால் விலை உயர்வை திரும்ப பெறச் செய்ய வேண்டும்.
பால் விலை உயர்வை முடிவு செய்ய 4 பேர் கொண்ட குழுவினை அமைக்க வேண்டும். இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி, பொதுமக்களின் பிரதிநிதி, தனியார் பால் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி, பால் முகவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும். இவர்கள் முடிவு செய்யும் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
தனியார் பால் நிறுவனங்கள், பால் முகவர்களின் வருமானத்தை சதவிகித அடிப்படையில் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். இந்த விலை உயர்வைத் திரும்ப பெறுவது, பால் முகவர்களின் வருமானத்தை உயர்த்துவது தொடர்பாக கோரிக்கை மனுவை தனியார் பால் நிறுவனங்களிடம் திங்கள்கிழமை வழங்க உள்ளோம். இதற்கு தகுந்த முடிவு எடுக்க நிறுவனங்கள் தவறினால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வோம் என்றார் பொன்னுசாமி.
1.5 கோடி லிட்டர் பால் தேவை
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் 25 லட்சம் லிட்டர் பாலினை தமிழக அரசின் ஆவின் வழங்குகிறது. மீதமுள்ள 1.25 கோடி லிட்டர் பால் தேவை தனியார் பால் நிறுவனங்கள் மூலமே நிறைவு செய்யப்படுகிறது.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் 11.50 லட்சம் லிட்டர் பால் தேவையை ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்கிறது. மீதமுள்ள 13.50 லட்சம் லிட்டர் பால், தனியார் நிறுவனம் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் 7.50 லட்சம் லிட்டர் பாலை, விலையை உயர்த்தும் குறிப்பிட்ட தனியார் பால் நிறுவனங்களே பூர்த்தி செய்கின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக