திங்கள், 4 நவம்பர், 2013

சிதம்பரம் அருகே மின்கம்பியை மிதித்த 2 தொழிலாளிகள் உடல் கருகி சாவு

சிதம்பரம்:சிதம்பரம் அருகே பறவைகளை வேட்டையாட சென்ற போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 தொழிலாளிகள் மின்சாரம் தாக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் துரைப்பாடி பகுதியை சேர்ந்த அரிதாஸ் (வயது38), சுப்பிரமணி(30), இவர்கள் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் பழைய பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழிலாளிகள். இருவரும் அக்கா– தங்கையை திருமணம் செய்துள்ளனர். இதில் அரிதாசுக்கு கடந்த 17 வருடத்திற்கு முன்பு திருமணமாகி சுமதி என்ற மனைவியும் மகள், 2 மகன்கள் உள்ளனர். சுமதியின் தங்கையான சாந்திக்கும். இவருக்கும், சுப்பிரமணி என்பவருக்கும் சுமார் 13 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இதில், அரிதாஸ் தனது குடும்பத்துடன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு வேளக்குடி கிராமத்தில் தங்கி பழைய பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் கடலூர் குடிகாடு கிராமத்தில் தங்கி அதே தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கடலூர் குடிகாட்டில் இருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு தனது அக்கா சுமதி வீட்டிற்கு செல்லலாம் என சாந்தி தனது கணவர் சுப்பிரமணியிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, சுப்பிரமணி தனது குடும்பத்தினருடன் சிதம்பரம் வடக்கு வேளக்குடி கிராமத்திற்கு வந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு அரிதாஸ் மற்றும் சுப்பிரமணி ஆகிய 2 பேரும் தங்களது மனைவிகளிடம் பறவைகளை வேட்டையாடி வருகிறோம் என கூறிவிட்டு அரிதாசின் மோட்டார் சைக்கிளில் பெராம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அக்கரை காட்டூர் அருகே உள்ள சவுக்கு தோப்பிற்கு சென்றனர். அங்கு இருவரும் தனித்தனி திசையில் நின்று பறவைகளை வேட்டையாடி பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அதிகாலை இரவு நேரம் என்பதால் சுப்பிரமணியன் அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை தெரியாமல் மிதித்த போது, அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் சத்தம் போட்டார்.இருந்த போதிலும் மின்சாரம் தாக்கி சுப்பிரமணியன உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சுப்பிரமணியனின் அலறல் சத்தத்தை கேட்ட அரிதாஸ் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, அவரும் அதே மின்கம்பி மிதித்து பரிதாபமாக இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்து கிடந்தனர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது வயல்களுக்கு சவுக்கு தோப்பு வழியாக சென்றுள்ளனர். அப்போது, அங்கு 2 பேர் மின்கம்பியில் சிக்கி இறந்து கிடப்பதை பார்த்த அவர்கள் அண்ணாமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அண்ணாமலைநகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், லட்சுமிநாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவர்களின் உடலை பார்வையிட்டனர்.

இச்சம்பவம் குறித்து பெராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் விநாயகம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். இதைறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த சுப்பிரமணி, அரிதாசின் உடல்கலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பறவைகளை வேட்டையாட சென்ற இருவர் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக