வாஷிங்டன்: அமெரிக்காவில் பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் புதிய வரவு-செலவு திட்டம் குறித்து குடியரசு கட்சி-ஜனநாயக கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு அமெரிக்காவை மீண்டும் பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னர் அமெரிக்காவில் கடந்த 1995 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1996-ஆம் ஆண்டு ஜனவரி வரை பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு நெருங்கிய தருவாயில், வரவுசெலவுத் திட்ட மசோதா, குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் அவைக்கும், ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் செனட் அவைக்கும் இடையே மாறி மாறி சென்று வந்தது.
வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக, அதிபர் ஒபாமாவின் சுகாதார சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதைத் தாமதப்படுத்த வேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் கோருவதை ஜனநாயகக் கட்சியினர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
இந்த சண்டையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
இந்த அரசியல் சண்டையால் அமெரிக்க மக்களில் சிலருக்கும், வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றுக்கும் விரைவாகவே பாதிப்பு இருக்கும்.
உதாரணத்துக்கு பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காக்கள் திறக்காது என்ற நிலையில், அதை ஒட்டி வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். உதாரணத்துக்கு நியுயார்க்கின் கடல் பரப்பில் இருக்கும் பிரசித்தி பெற்ற சுதந்திர தேவி சிலை. இது ஒரு தேசிய சின்னம். அது சுற்றுலாப் பயணிகளூக்குத் திறக்கப்படாது போகும்.
அமெரிக்காவில் பாஸ்போர்ட் அலுவலங்கங்கள் திறக்கப்படாது. அது போல வெளிநாடுகளில் அமெரிக்க விசா தரும் அலுவலகங்கள் மூடப்படும். இதனால் இந்த நெருக்கடி தீரும் வரை அமெரிக்க விசா வாங்க முயலும் வெளிநாட்டு மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிறர் தங்கள் அமெரிக்கப் பயணத்தை ஒத்தி வைக்க வேண்டியதுதான்.
அமெரிக்காவிலேயே, சுற்றுச்சூழல் பராமரிப்பு, நகரங்களில் குப்பை கூளங்களை அகற்றுவது போன்ற பொது சுகாதாரப் பணிகள் நிறுத்தப்படும். சில நல்ல விஷயங்களும் நடக்கும் — கார் போன்ற வாகனங்களை நிறுத்தக் கூடாத இடங்களில் நிறுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் பாதிக்கப்படும். பார்க்கிங் டிக்கெட் போட வார்டன்கள் இருந்தால்தானே அதைச் செய்ய முடியும்.
விமானப் போக்குவரத்து பாதிக்கப்படாது. ‘ஏர் ட்ராபிக் கண்ட்ரோல்’ என்ற விமான போக்கு வரத்தைக் கண்காணிக்கும் வேலை பாதிக்கப்படாது. அது போல அமெரிக்காவின் அணுகுண்டுகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரிகளும் வேலையில்தான் இருப்பார்கள்.
எனவே குண்டுகள் தவறான கைகளுக்குப் போய் விடவோ அல்லது எதேச்சையாக வேறொரு நாட்டில் விழவோ வாய்ப்பில்லை. மற்ற சிறிய மற்றும் பெரிய விளைவுகளும் ஏற்படலாம். மொத்தம் உள்ள இருபது லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் சுமார் 7 லட்சம் ஊழியர்களுக்கு வேலை இருக்காது, அல்லது வேலை செய்தாலும் சம்பளம் தரப்படாது, தற்காலிகமாகவாவது.
இந்த அரசு அலுவலகங்கள் மூடப்படுவது சிறிது காலத்துக்கே என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவானதாகவே இருக்கும். ஆனால் இது மேலும் சில வாரங்கள் இழுபட்டால், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும்.
எப்படியிருந்தாலும், நாட்டின் அரசியல் அமைப்பு மற்றுமொரு நிதி நெருக்கடியை எதிர்நோக்குகிறது. அமெரிக்கா எந்த அளவு கடன் வாங்கலாம் என்பது குறித்து ஒரு வரம்பு இருக்கிறது. அது அமெரிக்க நாடாளுமன்றத்தால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உயர்த்தப்பட்டால் தவிர, மத்திய அரசு அதன் செலவினங்களை சமாளிக்க முடியாமல் போகும்.
கடன் தவணையை கட்டமுடியாமல் போவது என்பதுதான் நிதித் துறைக்கு இருக்கும் பெரிய கவலை. அமெரிக்க அரசுக்கு இருக்கும் கடன் என்பது ஒரு பெரிய பாதுகாப்பான முதலீட்டுக் கருவி என்ற வகையில், அமெரிக்கா இந்தக் கடன் தவணையைக் கட்ட முடியாமல் போனால் உலக நிதிச் சந்தைகளில் அது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும்.
ஆனால் அரசாங்கம், ஒப்பந்தக்காரர்களுக்கு தர வேண்டிய தொகைகளை தராமல் நிறுத்துவது அல்லது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தராமல் நிறுத்துவது போன்றவற்றை செய்யலாம்.
இதை செய்வது என்பது அமெரிக்க உள்நாட்டில் சில பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். வளர்ச்சியை பலவீனப்படுத்தும். அரசு நிதிகள் மீதான முட்டுக்கட்டை நிலை என்பது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு மறைமுகமாகப் பார்த்தால் ஒரு சாத்தியக்கூறான பிரச்னைதான்.
அமெரிக்க மத்திய வங்கிக்கும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் பலமாக புத்துயிர் பெற ஊக்குவிக்க, பண நோட்டுகளை அச்சடித்து சந்தையில் விடும் ’குவாண்டிடேடிவ் ஈஸிங்’ என்ற திட்டத்தை படிப்படியாக குறைப்பது என்ற பிரச்னையை அதற்கு இந்த நெருக்கடி ஏற்படுத்தும்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக