ஞாயிறு, 13 அக்டோபர், 2013

பரங்கிப்பேட்டையில் மீன்வரத்து குறைந்ததால் வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி நிறுத்தம்

பரங்கிப்பேட்டை:பருவ நிலை மாற்றம் காரணமாக மீன்வரத்து குறைந்ததால் இரு நாட்களாக பரங்கிப்பேட்டை வத்தகரை அன்னங்கோவிலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, சின்னூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் பிடிக்கும் மீனை பரங்கிப்பேட்டை அடுத்த அன்னங்கோவிலுக்கு கொண்டு வந்து ஏலம் விட்டு வருகின்றனர்.மத்தி, வஞ்சரம், சுங்கான் உள்ளிட்ட உயர்ரக மீன்களை, வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.

இதனால் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதி எப்போதும் பிசியாகவே இருக்கும்.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பருவ நிலை மாற்றம் காரணமாக கடலில் அதிகளவு மீன் வகைகள் கிடைக்கவில்லை. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால், அன்னங்கோவில் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக