ஞாயிறு, 13 அக்டோபர், 2013

கரையைக் கடந்தது பைலின் புயல்

கோபால்பூர்:சனிக்கிழமை இரவு பைலின் புயல் தெற்கு ஒடிஷாவின் கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது. அச்சமயம் 250 கிலோ மீட்டர் வேக சூறாவளிக் காற்று வீசியது.

இந்தப் புயல் துறைமுக நகரான கோபால்பூரைத் தாக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. அங்கிருந்த பல ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுவிட்டனர்.

 
புயல்காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.இந்தியா வரலாற்றிலேயே மிகப் பெரும் புயல் என்று வர்ணிக்கப்படும் இந்த புயல் காரணமாக கடந்த 24 மணி நேரமாக கடலோர ஆந்திரா மற்றும் ஒடிஷாவில் கடுமையான காற்றுடன் கூடிய மழை கொட்டிக்கொண்டிருக்கிறது.

வங்காள விரிகுடாவிலிருந்து நகர்ந்துவந்த இப்புயல் காரணமாக சுமார்
7 1/2 லட்சம் மக்கள் ஏற்கனவே தமது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்புக்காக வெளியேறியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் கடல் பகுதிகளில் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. கடலும் கொந்தளிப்பாக உள்ளது. சில இடங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ள இந்திய அதிகாரிகள், புயல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசாவில் 1999-இல் வீசிய பெரும் புயல் மழையில் சுமார் 10 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக