புதன், 30 அக்டோபர், 2013

அமீரக இந்திய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் தொடக்கம்

துபை :ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு காப்பீடு, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் வயலார் ரவி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
சர்வதேச அளவில் பணியாற்றும் 50 லட்சம் இந்திய தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்கவும், நிதி உதவி அளிக்கவும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
மகாத்மா காந்தி பிரவாஸி சுரக்ஷா யோஜனா என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் கடந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் குடியேற்ற சோதனை தேவைப்படுகின்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது .
அதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு இச்சமூக பாதுகாப்புத் திட்டம் துபையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பவும், இந்தியாவில் அவர்கள் மறுவாழ்வை தொடங்கவும், அவர்களுக்கான ஓய்வூதியம், வெளிநாடுகளில் பணியாற்றும் காலத்தில் ஆயுள் காப்பீடு போன்றவற்றுக்காக இத்திட்டத்தின் மூலம் அரசு சார்பில் தலா ரூ.1000 ஆண்டு சந்தா செலுத்தப்படுகிறது.
மேலும் பெண் ஊழியர்களுக்கு கூடுதலாக தலா ரூ.1000 சந்தா செலுத்தப்படுகிறது. இவர்களின் சேமிப்பு ஆண்டிற்கு ரூ.1,000 முதல் ரூ.12,000 வரை என கணக்கிடப்பட்டுள்ளது. வருடத்திற்கு ரூ.4,000 அல்லது அதற்கு மேலாக சேமிப்பவர்களுக்காக சிறப்புச் சந்தாவாக தலா ரூ.900 செலுத்தும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தாயகம் திரும்பி இந்தியாவில் மறுவாழ்வை தொடங்குகின்றவர்களுக்கு அரசு உதவுகிறது. வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்களின் பாதுகாப்பு, உத்தரவாதம் மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட தேவைகள் அனைத்தையும் கவனமாக பரிசீலனை செய்து இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
இந்தியர்கள் வாழும் பிற நாடுகளிலும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வயலார் ரவி கூறினார். மேலும், குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இணைய சேவை திட்டம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக