புதன், 23 அக்டோபர், 2013

கடலூர் நகரில் சாலை விபத்துக்கள்...அதிகரிப்பு! போக்குவரத்து போலீசார் அலட்சியம்

கடலூர்:போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் கடலூர் நகர பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
கடலூர் நகரப் பகுதியில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகரைச்சுற்றி 100க்கும் மேற்பட்ட பல புதிய நகர்கள் உருவாகியுள்ளன. மொத்தத்தில் இந்நகரத்தில் 3 லட்சம் மக்கள் புழங்கக்கூடிய இடமாக உள்ளது. இவ்வளவு மக்களும் கடைவீதிக்காக ஒரே சாலைக்கு தான் வரவேண்டிய நிலை உள்ளது.
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள லாரன்ஸ்ரோடு, பாரதி ரோடு, நேதாஜி ரோடு ஆகிய ஒரே சாலையில் அனைத்து கடைகளும் உள்ளன. இதனால் மக்கள் இந்த சாலைகள் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீ சார், செம்மண்டலம், அரசு மருத்துவமனை, டவுன் ஹால் அருகே ரவுண்டானா, கலெக்டர் அலுவலக சாலை சந்திப்பு, உட்லண்ட்ஸ் ஓட்டல், அண்ணா மேம்பாலம் உட்பட பல இடங்களில் தானியங்கி சிக்னல்களை அமைத்துள்ளனர்.
மின் இணைப்பு கட்
இந்த சிக்னல்களை அமைப்பதற்காகவும், நிர்வாகம் செய்வதற்காகவும் தனியார் விளம்பர நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வினால் ஏற்பட்ட பிரச்னையில் இந்த தானியங்கி சிக்னல்களுக்கு வழங்கப்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
கடந்த 6 மாதத்திற்கும் மேலாக அண்ணா மேம்பாலம் சிக்னல் மட்டுமே இயங்குகிறது. மற்ற 3 சிக்னல்களும் செயலிழந்து விட்டன. இதை இயங்க வைக்க போலீசார் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இப்பிரச்னை முடிவுக்கு வருவதற்குள் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக முக்கிய சாலைகளில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
தரமற்ற கேமரா
இந்த தரமற்ற கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்களில் "இமேஜ்' சரியில்லாததால் அண்மையில் நடந்த செயின் பறிப்பு முயற்சி சம்பவத்தில் திருடனின் உருவம் கண்டுபிடிக்க முடியாமல் போனது. இதை சீரமைக்க போலீசார் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் பின்னால் வரும் வாகனங்களைப்பற்றி கவலைப்படாமல், போலீசார் எதிரிலேயே திடீரென கண்ட இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.
2 வாரத்தில் 5 பேர் பலி
போக்குவரத்து போலீசார் முறையாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாததால் நகரில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக கடந்த 2 வாரத்தில் மட்டும் வாகனங்கள் மோதி 5 பேர் இறந்துள்ளனர். இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படாத விபத்துகள் ஏராளமாக உள்ளன.
மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் அதிகரித்து வரும் விபத்துக்களைப் பார்த்து பொது மக்கள் பலர் சாலையில் நடக்கவே அச்சமடைந்துள்ளனர். வரும் தீபாவளி பண்டிகையொட்டி கடை வீதியில் அதிகரிக்கும் மக்கள் கூட்டத்தை போலீசார் எவ்வாறு கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக