வியாழன், 10 அக்டோபர், 2013

'முசாபர்நகர் கலவரத்தின்போது முஸ்லீம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்'

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சமீபத்தில் வெடித்த பெரும் கலவரத்தின்போது பல முஸ்லீம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் இந்தத் தகவலை வெளியிட்டார்.மேலும் இந்தக் கலவரம் அரசியல் உள்நோக்கத்துடன் தூண்டி விடப்பட்டதாகவும், தேர்தலை மனதில் கொண்டு இந்தக் கலவரம் ஏற்படுத்தப்பட்டதாகவும், நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளியான அமீத் ஷா, தற்போது உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் சுதா சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சுதா கூறியுள்ளதாவது...


முசாபர்நகர் கலவரத்தின்போது பெண்களை குறி வைத்து பல வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மானபங்கம் செய்தது, பலாத்காரம் செய்தது ஆகியவை இதில் அடங்கும். அத்தனையும் தேர்தலை மனதில் கொண்டு நடத்தப்பட்ட உள்நோக்கத்துடன் கூடிய அரசியல்மயமாக்கப்பட்ட வன்முறையாகும்.


லோக்சபா தேர்தலில் தங்களது எதிர்த் தரப்புக்கு வாக்குகள் கிடைத்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் சிலர் இந்த கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம். அவர்கள் முஸ்லீம் பெண்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளியான அமீத் ஷா, உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருப்பதையும் நாம் மனதில் கொண்டாக வேண்டும். அதைப் புறக்கணிக்க முடியாது.


6 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு கலவரம் பாதித்த முசாபர் நகரில் அக்டோபர் 5ம் தேதியன்று பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுநடந்தது குறித்து விசாரித்தது. அதன் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளோம் என்றார் சுதா சுந்தரராமன்.
இந்தப் பேட்டியின்போது பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட 5 பெண்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து ஆண்கள் தங்களது பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர் மல்க விவரித்தனர்.

60 வயதான முதியவர் ஒருவர் தனது மருமகளுக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். செப்டம்பர் 8ம் தேதி கலவரத்தின்போது தனது மருமகள் வன்முறைக் கும்பலிடம் சிக்கிக் கொண்டதாகவும், அவர்களிடமிருந்து தப்ப முயன்றபோது ஜாட் இனத்தைச் சேர்ந்த சிலர் தனது மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் கூறினார். தனது உறவினர் ஒருவரையும் அக்கும்பல் கொன்று விட்டதாகவும் அந்த முதியவர் தெரிவித்தார்.
அந்த முதியவர் மேலும் கூறுகையில், நாங்கள் குடும்பத்துடன் தப்பி ஓடினோம். அப்போது எனது மருமகள் மட்டும் அந்தக் கும்பலிடம் சிக்கிக் கொண்டார். கரும்புக் காடு ஒன்றுக்குள் அவர் தப்பியோட முயன்றபோது அந்தக் கும்பல் விரட்டிச் சென்று நாசப்படுத்தி விட்டது. நாங்கள் அவரைத் தேடி வந்தபோது கரும்புக் காட்டுக்குள் வைத்து அவரைக் கண்டுபிடித்தோம் என்றார்.
30 வயதான இன்னொரு நபர் கூறுகையில், எனது மனைவியை 6 ஜாட் இனத்தவர்கள் சேர்ந்து ஒரு காட்டுக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்தனர். நாங்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அங்கிருந்த டாக்டர்கள், பலாத்காரம் என்று நாங்கள் பொய் சொல்வதாக கூறி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டனர். மேலும் ஒரு காவல்துறை அதிகாரியும் எனது மனைவியை தரக்குறைவாக திட்டினார் என்றார்.

இந்தக் கொடுமை போதாதென்று பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் பலர் மீது போலீஸார் பொய்யான முறையில் கொலை முயற்சி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

சுதா சுந்தரராமன் கூறுகையில், உ.பி. அரசு முஸ்லீ்ம்களுக்கு எதிரான இந்தக் கலவரத்தின்போது மிகவும் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் நடந்துள்ளது. கிட்டத்தட்ட நடவடிக்கையே எடுக்காத நிலையே அப்போது காணப்பட்டது. போலீஸார் மிகவும் மோசமாக நடந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கை அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டையும், நீதியையும் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக