கடலூர் முதுநகர்:வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதையடுத்து, கடலூர் துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. மேலும் வரண்டு கிடந்த ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக கோடையை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்தநிலையில் வங்கக்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவு அருகே உள்ள வடக்கு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. இது ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு, தென்கிழக்கே சுமார் 1,520 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகர கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவடைந்து புயலாக மாறும் பட்சத்தில் 2 அல்லது 3 நாட்களில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடலூர் துறைமுகத்தில் 1–ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் கடல் அலைகள் மற்றும் கடல் கொந்தளிப்பு வழக்கத்தை விட சற்றே அதிகரித்து காணப்படும் என துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக