ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

மோடி பதவி விலகக் கோரி குஜராத்தில் முழு அடைப்பு!

அஹ்மதாபாத்: “போலி என்கவுன்ட்டர் விவகாரத்தில், நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தி குஜராத்தில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸார் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு ஓரளவே ஆதரவு காணப்பட்டது. பஸ், ரயில்களை மறிக்க முயன்றதாகவும், கடைகளை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் 600-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர். போலி என்கவுன்ட்டர் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் குஜராத் போலீஸ் அதிகாரி டி.ஜி. வன்சாரா, மாநில உள்துறை செயலாளருக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தில், “தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டர் திட்டத்தை செயல்படுத்திய எங்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளீர்கள். இந்தத்திட்டத்தை வகுத்துக் கொடுத்த மாநில முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சுதந்திரமாக வெளியே உள்ளனர்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, மோடி பதவி விலக வேண்டுமென காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி குஜராத்தில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதையொட்டி மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 60,000 போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பழைய அஹ்மதாபாத் நகரமான வதஜ் மற்றும் கிழக்குப் பகுதிகளில் காலையில் 80 சதவீத வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக