ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சிரியா மீது தாக்குதல் நடத்த இந்தியா எதிர்ப்பு!

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்: ஐ.நா.வின் அங்கீகாரமின்றி சிரியா மீது ஒருதலைப்பட்சமாக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதை இந்தியா எதிர்க்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ரஷியாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் வியாழக்கிழமை இரவு விருந்தளித்தார். இந்த விருந்தின்போது சிரியா விவகாரமே முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மன்மோகன் சிங் விளக்கினார். இந்த விருந்தில் திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவும் கலந்து கொண்டார். அங்கு பிரதமர் பேசியது குறித்து அலுவாலியா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: சிரியா மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் ஐ.நா. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அமைய வேண்டும் என்றும், ஐ.நா. அங்கீகாரமின்றி சிரியா மீது ஒருதலைப்பட்சமாக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதை இந்தியா எதிர்க்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்தார். சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஐ.நா. நிபுணர்கள் குழு விசாரணை நடத்தியுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை வரும் வரை உலக சமுதாயம் காத்திருக்க வேண்டும். உலகின் எந்தப் பகுதியிலும் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை இந்தியா கண்டிக்கிறது என்று ஜி20 தலைவர்களிடம் பிரதமர் கூறினார். சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பிருந்தாலும் அங்கு என்ன நடைபெற்றது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். சிரியாவில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட எந்த தாக்குதல் நடவடிக்கையையும் இந்தியா விரும்பவில்லை. ஏனெனில், அது சர்வதேச சட்டங்களை மீறுவதாக அமையும். சிரியா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றால், அதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். சிரியாவில் ஐ.நா. நிபுணர்கள் மேற்கொண்டு வரும் விசாரணை குறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், ஜி20 நாடுகளின் தலைவர்களிடம் விளக்கினார். ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை விரைவில் வெளியாக உள்ளதாக அவர் சூசகமாகத் தெரிவித்தார் என்றார் மான்டேக் சிங் அலுவாலியா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக