கடலூர்:கடலூர் நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. இதனால் மக்கள் தினம்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணி கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி துவங்கியது. 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டிய இந்த பணி குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தொடர் அலட்சியம் காரணமாக திட்டம் துவங்கி 5 ஆண்டுகளாகியும் இன்னமும் பணி முடிந்தபாடில்லை.
குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒருங்கிணைந்து செயல்படாமல் மேன் ஹோல் தொட்டி கட்டுவதற்கு தனியாக சாலையில் பள்ளம் தோண்டுவதும், அதனை கட்டி முடித்து பல மாதங்கள் கழித்து பிரதான குழாய் புதைக்க மீண்டும் சாலையில் பள்ளம் தோண்டுவதும், அதனை முடித்து பல மாதங்களுக்கு பிறகு வீடுகளுக்கு இணைப்பு குழாய் புதைக்கும் பணியை செய்வது என கடந்த 5 ஆண்டுகளில் ஆமை வேகத்தில் பணிகளை செய்து ஒரு வழியாக குழாய் அமைக்கும் பணிகளை முடிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பள்ளம் தோண்டியபோது திருப்பாதிரிப்புலியூர், வண்டிப்பாளையம் மற்றும் புதுப்பாளையம் பகுதி சாலை பள்ளங்களில் விழுந்து மூன்று பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதனைக்கண்டித்து மக்கள் கடையடைப்பு போராட்டமும் நடத்தினர்.
கடலூர் வண்ணாரப்பாளையத்தில் அமைக்கப்பட்டுவரும் கழிவு நீரேற்று நிலையம் தேவனாம்பட்டினத்தில் ரூ. 10 கோடியில், 6.6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணியும் இன்னும் முடியவடையவில்லை. இந்த பணிகள் முடியவே இன்னும் பல மாதங்களாகும் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்திவரும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, சுத்திகரிப்பு நிலையப் பணிகள் 80 சதம் முடிவடைந்துள்ளது. கடலூரில் இன்னும் 20 ஆண்டுகளில் இருக்கப் போகும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு அதற்கேற்றார்போல், பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்ட 5,702 ஆள் இறங்கு குழிகளில் 5,696 எண்கள் முடிக்கப்பட்டுள்ளன. 1,57,419 மீட்டர் கழிவுநீர் சேகரிப்பு குழாய்களில் 1,57,009 மீட்டர் முடிக்கப்பட்டுள்ளது. 7 கழிவு நீர், நீரேற்று நிலையங்களில் 6 எண்ணிக்கை முழுமையாக முடிக்கப்பட்டு எஞ்சிய 1 கழிவு நீரேற்று நிலையத்தில் 85 சத பணிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 99 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
கடலூர் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் ஒரு மாத காலத்திற்குள் நிறைவடையும். இந்த திட்டம் செயல்படத் தொடங்கியதும், 5 ஆண்டுகள் பராமரிப்புப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியமே மேற்கொள்ளும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றுக்கு 12.50 எம்.எல்.டி. கழிவு நீர் சுத்திகரிக்கப்படும் என்றனர்.
2008-ம் ஆண்டு முடிக்கப்பட வேண்டிய பணிகள் இப்போது வரை நிறைவடையவில்லை. எப்போது கேட்டாலும் ஒரு மாதத்தில் பணிகள் நிறைவடையும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டத்தால் நகரில் பெரும்பாலான சாலைகள் அதற்கான அடையாளமே இல்லாமல் உள்ளன.
மேலும் கழிவு நீரேற்று நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 7 தொட்டிகளில் ஒன்று பிடிமானம் இல்லாமல் சாய்ந்த நிலையில் இருக்கிறது. இந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை கட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு செய்தால் பணிகள் நிறைவடைய மேலும் காலதாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு நாளும் மக்கள் கடும் அவதியடைகின்றனர். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தி கடலூர் நகர மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திக்கொடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக