வியாழன், 12 செப்டம்பர், 2013

பரங்கிப்பேட்டையில் கடலோர காவல் நிலையம் :ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு

கடலூர் முதுநகர்:. கடலூர் மாவட்டத்தில் கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் பரங்கிப்பேட்டையில் கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.என கடலூரில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
 
கடலோர பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கடலூர் துறைமுகத்துக்கு வந்தார். அவரை கடலூர் துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன் வரவேற்றார்.
பின்னர் தானே புயலால் சேதம் அடைந்த 2 அதிநவீன ரோந்து படகுகளை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா, துணை சூப்பிரண்டு சுந்தரவடிவேலு, கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் விஜிகுமார், கியூபிராஞ்ச் இன்ஸ்பெக்டர் பாண்டியன், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
அப்போது  சைலேந்திரபாபு கூறியதாவது தமிழ்நாட்டில் கடலோர பகுதி சுமார் 1,076 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் 591 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்பொழுது தமிழகம் முழுவதும் 12 கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. மேலும் புதிதாக 30 கடலோர போலீஸ் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும்கடலூர் மாவட்டத்தில் கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் பரங்கிப்பேட்டையில் கடலோர போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இந்த போலீஸ் நிலையங்கள் மூலம் கடல் பகுதியில் 23 கிலோ மீட்டர் வரை பாதுகாப்பு வழங்கப்படும் இதன் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்படும்.
இது தவிர கடலோர பாதுகாப்புக்கு ரூ.160 கோடி செலவில் 20 அதி நவீன ரோந்து படகுகள் வாங்கப்பட உள்ளது. இதில் 2 படகுகள் கடலூர் மாவட்ட கடலோர காவல் படைக்கு வழங்கப்படும். அவரச காலத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட தற்பொழுது கடலோர காவல் படையில் 6 ஹெலிகாப்டர்கள் உள்ளன.
கடந்த 2012–ம் ஆண்டில் 16 படகு விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 49 பேர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 10 பேர் இறந்துள்ளனர். 2013–ம் ஆண்டில் நடந்த 22 படகு விபத்தில் 110 பேர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 12 பேர் மட்டும் இறந்துள்ளனர். கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடலூர் துறைமுகத்தில் இருந்து காரில் புறப்பட்டு முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக