ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடலூர் மாவட்டத்தில் 39 இணையதள மையங்களுக்கு அங்கீகாரம் கலெக்டர் தகவல்

கடலூர்,வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் பெயரை சேர்த்துக்கொள்ள, கடலூர் மாவட்டத்தில் 39 இணையதள மையங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கிர்லோஷ்குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக கலெக்டர் கிர்லோஷ்குமார் கூறியதாவது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் பதிவுகளில் திருத்தம் செய்வது மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்படும் தவறுகளை பெருமளவில் குறைத்து சரியான விவரங்களை பதிவு செய்திட இணையதளம்(ஆன்–லைன்) மூலம் விண்ணப்பங்களை அளித்திட இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வந்தது.
அதன்படி தற்போது இணைதளம் இணைப்புடன் சொந்தமாக கணினி வைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த வசதியினை உபயோகித்து பயன்பெற்று வருகின்றனர்.

இணையதள இணைப்பு வசதி இல்லாதவர்களும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் ஆணையர் ஆகியோரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் கடலூர் மாவட்டத்தில் 39 தனியார் இணையதள மையங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திட்டக்குடி(தனி) சட்டமன்ற தொகுதியில் 2 கம்ப்யூட்டர் மையங்கள், விருத்தாசலம்–12. நெய்வேலி–2, பண்ருட்டி–4, கடலூர்–3, குறிஞ்சிப்பாடி–2, புவனகிரி–4, சிதம்பரம்–8, காட்டுமன்னார்கோவில்(தனி)– 2 என மொத்தம் 39 மையங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகிய தொடர்பான பணிகளுக்கும், தேர்தல் இணைய தளத்தில் விபரங்கள் தேடுதல் மற்றும் வாக்காளர் பட்டியல் பக்கங்களின் நகலினை அச்சிட்டு பெறுதல் போன்ற பணிகளுக்கும் உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கேற்ப வாக்காளர் பதிவு மையங்களாக செயல்பட மேற்படி இணைதள மையங்களின் உரிமையாளர்களுடன் மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டுள்ளது.
மேற்கண்ட அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மற்றும் திருத்தங்கள், ஒரே சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பிடம் மற்றும் முகவரி மாற்றம் செய்வது, இணையதளம் மூலம் புகார் பதிவு செய்திட ஆகியவை குறித்து விண்ணப்பிக்க தலா ரூ.10, வாக்காளர் பட்டியலை அச்சிட்டு தர ஒரு பக்கத்துக்கு ரூ.3, வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், வாக்குச்சாவடி மையங்களின் பெயர், கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் புகார்களின் நிலை குறித்து அறிய ரூ.3, மேற்கண்ட தேடல்களின் முடிவுகளை அச்சிட்டு அளித்திட ரூ.2 கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கலெக்டர் கூறினார்.

இதற்கிடையே அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் உரிமையாளர்கள், பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மேற்கண்ட 39 மையங்களும் மாவட்ட நிர்வாகத்தால் வாக்காளர் சேவைகளை செய்திட அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் என்பதை தெரிவித்திடும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னத்துடன் கூடிய விளம்பர பதாகையும் வழங்கப்பட்டது.
updated

கணினி வசதி உள்ளவர்கள் இணைய தள மையங்களுக்குச் செல்லாமல் தாங்களே நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணையதள முகவரி.
www.elections.tn.gov.in
www.eci.nic.in


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக