ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

1.5 கி.மீ., சாலை போடாததால் போக்குவரத்தின்றி 50 கி.மீ., பரங்கிப்பேட்டை கடற்கரை சாலை


கடலூர்/பரங்கிப்பேட்டை:கடலூர் முதுநகர் அடுத்த சித்திரைப்பேட்டை அருகே 1.5 கி.மீ., சாலைப் பணி நிறைவேற்றாததால் ராசாப்பேட்டை - பரங்கிப்பேட்டைகடற்கரை சாலை வாகன போக்குவரத்தின்றி காட்சிப் பொருளாக உள்ளது.

கடலூர் முதுநகரில் இருந்து பரங்கிப்பேட்டை வரை 70க்கும் மேற்பட்ட கடற்கரை மீனவ
கிராமங்கள் சுனாமிக்கு பின் மறு சீரமைப்பு பெற்றுள்ளன. கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் அவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்புகள் கட்டிக்கொடுத்துள்ளன.மீண்டும் சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை உடனடியாக காப்பாற்றும் விதமாக தரமான சாலை வசதிகள், மேம்பாலங்கள் ஏற்படுத்தப்பட்டன.

கடலூர் சிப்காட் அருகே உள்ள ராசாப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து அனைத்து மீனவ கிராமங்களையும் இணைத்து 20 கி.மீ., தூரம் சாலை பரங்கிப்பேட்டையில் முடியும்படி திட்டமிடப்பட்டது.இங்கிருந்து சிதம்பரம், சுற்றுலாத் தலமான கிள்ளை ஆகிய இடங்களை இச்சாலை இணைக்கிறது. கடலூர் - சிதம்பரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இணையாக இந்த சாலை அமைந்துள்ளது.

ராசாப்பேட்டையில் இருந்து சித்திரைப்பேட்டை வரை செல்லும் சாலை அதைத் தொடர்ந்து 1.5 கி.மீ., சாலைக்கென நிலம் ஆர்ஜிதம் செய்யாததால் சாலைப்பணி மேற்கொள்ளப்படவில்லை. அதைத் தொடர்ந்து தம்மனாம்பேட்டையில் இருந்து மீண்டும் தார் சாலை போடப்பட்டு பரங்கிப்பேட்டை வரை தடையில்லா பயணம் மேற்கொள்ளலாம்.மேலும், இந்த சாலையில் நாகார்ஜூனா ஆயில் நிறுவனம், பவர் கார்பரேஷன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அமைகின்றன. இதனால் கனரக வாகனங்கள் இடையூறின்றி சிதம்பரம் செல்ல முடியும்.

இந்த சாலைக்கு இடைப்பட்ட 1.5 கி.மீ., சாலை போடப்படாததால் முடசல் ஓடையில் இருந்து கடலூர் வரும் பெரியகுப்பம் தம்மனாம்பேட்டை, திருச்சோபுரம், தியாகவல்லி, நடுத்திட்டு, நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, ராசாப்பேட்டை வழியாக கடலூர் முதுநகரை அடைகிறது.இதனால் 7 கி.மீ., தூரம் கூடுதலாக சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு கூடுதல் எரிபொருள் செலவு ஆவதோடு, காலநேரமும் விரயமாகிறது. இந்த 1.5 கி.மீ., சாலை போடாததால் சிதம்பரம் செல்லும் 50 கி.மீ., சாலையும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காட்சிப்பொருளாக உள்ளது.எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து நில ஆர்ஜித பணியை மேற்கொண்டால்தான் வெறிச்சோடிக் கிடக்கும் சாலையில் வாகன போக்குவரத்து துவங்கும்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக