முஸாஃபர் நகர்: உத்தர பிரதேசம் முஸாஃபர் நகரில் நடந்த கலவரங்களில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 450க்கும் அதிகமான நபர்களை காணவில்லை. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சாலைகளிலும், குளக்கரைகளிலும் உடல்கள் அநாதைகளாக கிடப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் வசிக்கும் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாக்குதல் நடந்துள்ளதாக மாவட்டத்தின் முக்கிய முஸ்லிம் தலைவர் குலாம் முஹம்மது தெரிவிக்கிறார். 50க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்காரங்கள் இம்மாதம் 8-ஆம் தேதிக்குப் பிறகு நடந்துள்ளதாக மாவட்ட போர்ட் உறுப்பினர் அப்துல் ஜப்பார் கூறுகிறார். லிசாட், புகானா, பாவடி, லாக், கரட் உள்ளிட்ட கிராமங்களில் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. லிஸாட் கிராமத்தில் ஏராளமானோரை ஒன்றாக தீ வைத்துக் கொளுத்தியதாகவும் தலைவர்கள் கூறுகின்றனர். போலீஸ் மற்றும் ப்ரொவிசனல் ஆர்ம்ட் கான்ஸ்டாபுலரி என்ற பி.ஏ.சி. படையில் உள்ள ஜாட் இனத்தவர்கள் இந்தக் கலவரங்களுக்கு தலைமையேற்றுள்ளனர். ஒரு சமூக மக்களை தேடிப் பிடித்து தாக்கினர் என்று காயமடைந்த டாக்டர் அன்ஸார் கூறுகிறார். ஏழை விவசாயிகளும், கூலி வேலைக்காரர்களுமான அப்பாவி முஸ்லிம்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் வன்முறையாளர்கள் கொள்ளையடித்துள்ளனர். “பாகிஸ்தான் அல்லது கப்ருஸ்தான்” என்ற முழக்கத்துடன் வந்த கும்பல்கள்தாம் தாக்குதல்களை நடத்தியதாக அப்துல் ஜப்பார் கூறுகிறார். கோயிலா, காக்டா, பிட்டவ்தா, முஹம்மதுபூர் ஆகிய கிராமங்களைச் சார்ந்த பெண்களும், குழந்தைகளும் அடங்கிய ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரஸூல்பூர்தபேதி என்ற கிராமத்தில் அகதிகளாக தங்கியுள்ளனர். அரசு இவர்களுக்கு போதிய உதவிகளை அளிக்கவில்லை.காக்டா கிராமத்தில் இரண்டு மஸ்ஜிதுகள் தகர்க்கப்பட்டுள்ளன என்று ரஸூல்பூரில் அகதியாக தங்கியுள்ள பஸு ஜஹாம் கூறுகிறார். இம்மாதம் ஏழாம் தேதி பா.ஜ.க. ஏற்பாடு செய்த மஹா பஞ்சாயத்திற்கு பிறகே வன்முறை தீவிரமடைந்தது.முஸ்லிம்களைச் சும்மா விடாதீர்கள் என்று ஜாட் இனத்தவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். ஆகஸ்ட் மாத இறுதியில் ஷானவாஸ் என்ற இளைஞரின் படுகொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் மோதல் துவங்கியது. வன்முறையாளர்கள் வாள்,துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர். தனது கிராமத்தில் இருந்து மட்டும் 6 பேரை காணவில்லை என்று பஸு ஜஹாம் கூறுகிறார். வீடுகளில் உள்ள பசுக்கள், ஆடுகளைக் கூட கலவரக்காரர்கள் திருடிச் சென்றுள்ளனர் போலீஸ் உதவிக்கு வரவில்லை என்றும் பஸு ஜஹாம் கூறுகிறார். முஸாஃபர் நகரில் தற்போதும் கலவரச் சூழல் நிலவுகிறது. வன்முறையாளர்களில் பெரும்பாலோர் கிராமவாசிகள்தாம் என்று அகதிகள் கூறுகின்றனர். குஜராத்தில் இருந்து 200க்கும் அதிகமான ஹிந்துத்துவா கும்பல் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. சாலை அருகில் உள்ள கரும்புத் தோட்டங்களில் பதுங்கியிருக்கும் இவர்கள் வாகனங்கள் மீது துப்பாக்கியால் சுடுவதால் சாலை அருகே மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. கடைகளும், கல்வி நிறுவனங்களும் மூடிக் கிடக்கின்றன.
முஸாஃபர் நகரிலிருந்து தேஜஸ் பத்திரிகையின் செய்தியாளர் பி. அனீப் -
source:thoothuonline.com
முஸாஃபர் நகரிலிருந்து தேஜஸ் பத்திரிகையின் செய்தியாளர் பி. அனீப் -
source:thoothuonline.com









0 கருத்துகள்:
கருத்துரையிடுக