புதன், 28 ஆகஸ்ட், 2013

தேர்தல் விதிமீறல்: பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆஜர்

பரங்கிப்பேட்டை:தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போடப்பட்ட வழக்குத் தொடர்பாக சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட திமுக செயலருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  நீதிபதி முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது 29-3-2011-ல் புதுச்சத்திரம் அருகே பெத்தாங்குப்பம், கம்பளிமேடு, சிந்தாமணிக்குப்பம் ஆகிய கிராமங்களில் 17 நான்கு சக்கர வாகனங்கள், 45 மோட்டார் சைக்கிள்கள் ஆகிய வாகனங்களுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் கண்காணிப்பு அலுவலர் கலையரசி, தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் வாகனங்களுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையில் ஆஜராக விதிவிலக்கு அளிக்குமாறு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்குரைஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அரசு வழக்குரைஞர் ஆஜரானால்தான் வழக்கு விசாரணை தொடங்க முடியும் என தெரிவித்ததை அடுத்து நீதிபதி பரமசிவம் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ஆகஸ்ட் 27-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவுப் பிறப்பித்திருந்தார்.
அதன்படி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நீதிபதி முன்பு ஆஜரானார். பின்னர் இவ்வழக்கு விசாரணையை 3-9-2013-க்கு ஒத்திவைத்து நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.
photo:mypno

0 கருத்துகள்:

கருத்துரையிடுக