ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மூடுவிழாவுக்குத் தொடக்க விழா?

கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் 18 மாவட்டங்களில், வீட்டு இணைப்புகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த ஜூலை 15-ஆம் தேதி வரை 22 லட்சம் சமையல் எரிவாயு உருளைகளை வழங்கி, இதற்கான மானியத் தொகையை 12.5 லட்சம் குடும்பங்களின் கணக்கில் சேர்த்துவிட்டதாக அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி குறிப்பிட்டார்.
மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறையோடு இன்னொரு நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.
இப்போது, நான்கு பெருநகரங்கள் மற்றும் பெங்களூரில் இனி 5 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை பொதுச் சந்தையில் விற்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் கட்டமாக, எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களிலும் இந்த விற்பனையைத் தொடங்கவிருக்கிறார்கள். அரசு குறிப்பிடும் அடையாள அட்டைகள் வைத்திருக்கும் எவரும் இதனை வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ சமையல் எரிவாயு உருளை அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கம், இடம்பெயரும் மக்கள் பயன்படுத்தத்தான் என்று மத்திய அரசு இப்போது கூறினாலும், இதன் தொலைநோக்குப் பார்வை அதுவல்ல. சமையல் எரிவாயுவுக்கு தற்போது தரப்படும் மானியம் முழுவதையும் மெல்லமெல்ல இல்லாமல் செய்வதற்கான தொடக்க விழாதான் இந்த நடைமுறை.
மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளைகளை முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வணிகச் சந்தைக்கு முறைகேடாக திசை திருப்பி பெருலாபம் பார்த்ததால், அரசுக்கு வீட்டு சமையல் எரிவாயு உருளைகளை அதிக எண்ணிக்கையில் தயாரித்து அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக, சமையல் எரிவாயு இணைப்புபெற்ற ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 உருளைகள் மட்டுமே மானிய விலையில் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதால், அதை 9 உருளைகள் என்று உயர்த்தியது.
இப்போது 5 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை பொதுச்சந்தையில் அறிமுகம் செய்வதால், கையாளுவதில் இதன் எளிமை காரணமாக எங்கும் எடுத்துச் செல்லலாம், நினைத்த நேரத்தில் வாங்கிக்கொள்ளலாம்; பரவலாக பெட்ரோல் நிலையங்களிலேயே விற்கப்படும் என்பதால், இதன் பயன்பாடு பல மடங்காக உயரும். அப்போது எண்ணெய் நிறுவனங்கள், தற்போது வீட்டு இணைப்புக்காக தயாரிக்கும் 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளைகளின் உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு அதிக லாபம் தரும் 5 கிலோ உருளையை மட்டுமே அதிக எண்ணிக்கையில் தயாரிக்கத் தொடங்கும்.
தற்போது வீட்டுப் பயன்பாட்டுக்கு மானியத்துடன் வழங்கப்படும் எரிவாயு உருளை விலை ரூ.410. மானியம் இல்லாமல் அதன் விலை ரூ.835. வணிக எரிவாயு உருளை (19கிலோ எடை) விலை ரூ.1,375.
5 கிலோ எரிவாயு உருளையின் விலை சுமார் ரூ.360 ஆக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது வணிக எரிவாயு உருளையின் விலையில் விற்பனை செய்யப் போகிறார்கள். எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம்தான் முக்கியம். ஆகவே 5 கிலோ எரிவாயு உருளைகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யவே முயலுவார்கள்.
வீட்டு இணைப்புக்குத் தரவேண்டிய மானியத்துடன்கூடிய 9 எரிவாயு உருளைகள் நிச்சயமாகக் கிடைக்கும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு மேற்கொண்டு எரிவாயு உருளைகளை வீட்டுப் பயன்பாட்டுக்காக வாங்க விரும்பும் குடும்பத்தினருக்கு ரூ.835 விலையில் கிடைக்க வேண்டிய உருளைகள் கிடைக்காது. பதிவு செய்தாலும், "இருப்பு இல்லை', "வந்து சேரவில்லை' என்று சாக்குபோக்கு சொல்லித் தட்டிக் கழிப்பார்கள். வேறு வழியில்லாமல் வணிக எரிவாயு உருளைகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு அனைத்துக் குடும்பங்களும் தள்ளப்படும்.
ரூ.1,375 கொடுத்து 19 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையை வாங்குவதற்குப் பதிலாக, 5 கிலோ எரிவாயு உருளையை வாங்கி வைத்துக் கொள்வதுதானே குடும்பச் சிக்கனத்துக்கும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கும் சரிப்பட்டுவரும்! இதைக் கருதித்தான் இந்த 5 கிலோ எரிவாயு உருளை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு இத்தோடு நிற்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது. 5 கிலோ எரிவாயு உருளைகள் பரவலாகி, வாழ்க்கையின் இன்றியமையாத "மளிகைப் பொருளாக' மாறிவிடும்போது, புதிதாக வீட்டு இணைப்புகள் கொடுப்பதையும் நிறுத்திவிடும். வாரிசு பெயர் மாற்றங்களையும் நிறுத்திவிடும்.
தற்போது வீட்டுச் சமையல் எரிவாயு உருளைகளுக்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.40,000 கோடி மானியத் தொகை அளிக்கிறது மத்திய அரசு. தற்போது "9 உருளைகள் மட்டுமே' என கட்டுப்பாடு விதித்ததன் மூலம் ரூ.10,000 கோடி மானியச் செலவு குறைந்துவிட்டது. 5 கிலோ உருளை பரவலாகும்போது, இந்த மானியச் செலவு மேலும் பாதி குறைந்துவிடும். அடுத்த 10 ஆண்டுகளில் ஒன்று, எரிவாயு உருளைகளை மக்கள் அனைவரும் மானியத்தை மறந்துவிட்டு வணிக விலையில் வாங்குவார்கள், அல்லது எல்லாரும் சூரியஅடுப்புகளுக்கு மாறியிருப்பார்கள்.
மெல்லமெல்ல சுமையைக் கூட்டி அதை இழுப்பதற்கு மாட்டைப் பழக்கும் மனிதனையும் அதேபோல பழக்க முடியும் எனத் தெரிந்து வைத்திருக்கிறது மத்திய அரசு. ஏமாறத் தயாராக இருக்கும் வாக்காளர்கள்; ஏமாற்றும் அரசு; என்னே இந்த நகைமுரண்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக