ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

புதிய ரேஷன் கார்டுகள்: எஸ்.எம்.எஸ்.ஸில் தகவல்

கடலூர்:புதிய ரேஷன் கார்டுகள் குறித்த விவரங்களை விண்ணப்பதாரரின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு வரிசை எண், பெயர், தந்தை பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் விண்ணப்பத்தின் நிலை ஆகியவை வட்ட வழங்கல் அலுவலகத்தில் கணினியில் பதிவு செய்யப்படுகிறது.
இந்த புதிய முறையில் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டவுடன் அதன் விவரங்கள் குறித்து விண்ணப்பதாரரின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படவுள்ளது.
மேலும் விண்ணப்பங்கள் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை முடிந்த பின்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது தள்ளுபடி செய்யப்பட்டதா? என்ற விவரங்களை வருவாய் ஆய்வாளர் பெயர், விண்ணப்பத்தின் கணினி பதிவு எண் ஆகிய தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படவுள்ளது.
இந்த தகவலை அனுப்புவது மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புதிய ரேஷன் கார்டு விவரங்களை எளிதில் காலதாமதம் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.மேலும் தேவையில்லாமல் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.முதல்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வருவாய் வட்டத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என வழங்கல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக