ஞாயிறு, 7 ஜூலை, 2013

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் போட்டியில் பிரிட்டனின் ஆண்டி முர்ரே சாம்பியன்

லண்டன் :விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் சாம்பியன் பட்டத்தை பிரிட்டனின் ஆண்டி முர்ரே வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் அவர் செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சை 6-4,7-5, 6-4 எனும் நேர் செட்களில் வென்றுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் பட்டத்தை வெல்வது கடந்த 77 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.

முதல் இரண்டு செட்களிலும் வென்ற ஆண்டி மர்ரி மூன்றாவது சுற்றிலும் எளிதாக வென்றுவிடுவார் என்கிற நம்பிக்கை அவரது ரசிகர்களிடையே இருந்தது. எனினும் மூன்றாவது செட்டையும் அதன் மூலம் சாம்பியன் பட்டத்தையும் அவர் போராடியே வெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

உலக ஆடவர் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் நோவாக் யாக்கோவைச்சுக்கும், இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆண்டி மர்ரிக்கும் இடையேயான மூன்றாவது செட் மிகவும் பரபரப்பாக இருந்தது.
ஒரு கட்டத்தில் மூன்றாவது செட்டில் இருவரும் 2-2 எனும் கணக்கில் இருந்தனர். பின்னர் அந்த செட்டின் போக்கு யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் எனும் சூழலை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக 5-4 எனும் கணக்கில் முன்னிலை வகித்த மர்ரி வெற்றியில் விளிம்புக்கு சென்று சென்று திரும்பினார்.

மூன்றாவது செட்டின் ஆறாவது ஆட்டத்தில் ஆண்டி மர்ரி 40-0 எனும் கணக்கில் முன்னணியில் இருந்தாலும், யாக்கோவிச் மீண்டு வந்து 40-40 க்கு எனும் சமநிலையை ஏற்படுத்தினார். பின்னர் அந்த ஆட்டத்தின் வெற்றி யாருக்குச் செல்லும் என்று கணிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.
அரங்கத்தில் குழுமியிருந்த பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன் உட்பட பலர் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கத்தில் இருந்ததை தொலைக்காட்சிகள் காட்டின.

இறுதியாக ஆண்டி மர்ரி பிரிட்டிஷ் மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

இது ஆண்டி மர்ரியின் இரண்டாவது பெரிய வெற்றியாகும். 26 வயதான அவர் கடந்த ஆண்டு அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றார்.

இன்று விம்பிள்டன் பகுதியில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் நிலவிய சூழலில், 15,000 ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி மூன்று மணிக்கும் கூடுதலான நேரம் நடைபெற்றது.

அகில இங்கிலாந்து டென்னிஸ் சங்கத்தால் நடத்தப்படும் இந்தப் போட்டியில் 1936 ஆம் ஆண்டு ஃபிரெட் பெரி பட்டத்தை வென்ற பிறகு, பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் விம்பிள்டன் பட்டத்தை பெறுவது இதுவே முதல் முறை.

அவரது வெற்றியை அடுத்து பிரிட்டனின் பல பகுதிகளிலும் கொண்டாட்டங்களை இடம்பெற்றன.சாம்பியன் கோப்பையுடன் முர்றேவிற்கு £ 1.6m பரிசுத்தொகை வழங்கப்பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக