கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கோடை காலங்களில் சரிந்து
வருவதால் அதை மீண்டும் உயர்த்துவதற்கான மழைநீர் சேகரிப்பை அவசியமாக்க
வேண்டும்.கடலூர் மாவட்டம் கடலோரப் பகுதியாக இருப்பதால் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது தண்ணீரை அதிகமாக பயன்படுத்தும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள், நெய்வேலி நிறுவனம், மினரல் வாட்டர் கம்பெனிகள் போன்றவைகளால் நிலத்தடி நீர் அதிகளவு வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தால் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை ஈடு செய்வதற்காக நிலத்தடி நீரை சேமிப்பது மிகவும் அவசியமாகிறது. நிலத்தடி நீரை போர்வெல் மூலம் வெளியேற்றாமல் நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்துள்ள நீரை பயன்படுத்துவதால் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். மேலும் ஆறுகளில் செக்டேம், பெட் டேம் போன்றவை அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் உயருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீரை நாம் பாதுகாக்க முடியும். பொதுப்பணித் துறை (நிலநீர் கோட்டம்) மூலம் நிலத்தடி நீர் கிணறுகளில் எடுக்கப்பட்ட சராசரி அளவீடுகள் கோடை காலத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் குறித்த புள்ளி விவரங்களை காட்டுகின்றன.
கடந்த 2011ம் ஆண்டில் 33 கிணறுகளில் எடுக்கப்பட்ட அளவீடுகளின் சராசரி 2.85 மீட்டராக இருந்தது பிப்ரவரியில் 3.51மீட்டராக உயர்ந்தது. மார்ச்சில் 4.10 ஆகவும், ஏப்ரலில் 4.71 ஆகவும், மே மாதத்தில் 4.64 ஆகவும் முறையே ஆகஸ்ட் மாதத்தில் 5.84 மீட்டராகவும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. குறைந்து வரும் இந்த நீர்மட்டம் மழைக் காலமான செப்டம்பரில் மீண்டும் உயரத் தொடங்குகிறது. செப்டம்பர் மாதத்தில் 5.45 ஆகவும், அக்டோபரில் 5.23, நவம்பரில் 3.45 ஆகவும், டிசம்பரில் 2.67 மீட்டராகவும் குறைந்து வருகிறது. அதேப் போன்று நடப்பாண்டு ஜனவரியில் 3.06 மீட்டராக இருந்தது பிப்ரவரியில் 3.91ஆகவும், முறையே 4.56, 5.18, 5.79, 6.27, செப்டம்பர் மாதம் 7.39 மீட்டராக குறைந்துள்ளது. இந்த நிலத்தடி நீர் மீண்டும் அக்டோபரில் 7.29 மீட்டராகவும், நவம்பரில் 4.61 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டோடு இந்த ஆண்டு ஒப்பிடுகையில் .21 மீட்டர் நீலத்தடி நீர் குறைந்துள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது: மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு நமக்கு தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதனால் நிலத்தடிநீரை சேமிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடலூர் பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நல்ல பலனை கொடுத்துள்ளது. தற்போது பாதிரிக்குப்பத்தில் கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படவுள்ளது. இதனால் நல்ல பலன் கிடைக்கும். ஆறுகள் முழுவதும் தடுப்பணையே கட்டிவிட முடியாது. இயற்கையாக மணல் நீரோட்டத்தில் தண்ணீர் இடம் பெயர வேண்டும். இருக்கின்ற நீர்த்தேக்கங்களைத் தூர்வாரி கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். ஆறுகளில் தரைமட்ட கீழ் தடுப்பணை கட்டுவது சிறந்தது. இது தண்ணீரை மட்டும் உறிஞ்சிக் கொண்டு மணல் நகருவதை தடுக்காது. நிலத்தடி நீரை பாதுகாப்பது தொடர்பாக கடந்த 2003ம் போடப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் தேவையின்றி வீணடிக்கப்படுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக