வியாழன், 20 ஜூன், 2013

இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு

டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் அளவில் சரிந்துள்ளது. இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 59.93 என்ற நிலையை அடைந்துவிட்டது.அமெரிக்க நிதி நிலையை சீராக்க அந் நாட்டு அரசு சில திட்டங்களை நேற்று அறிவித்தது. அதன்படி அமெரிக்க நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதிச் சலுகைகளை அந் நாடு குறைக்கவுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது.இது தவிர சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவதால் டாலர்களில் முதலீடு செய்வது (டாலர்களில் முதலீடு செய்யப்படும் பங்குகள்) அதிகரித்துள்ளது. மேலும் சீன தொழில்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சீன முதலீடுகளைக் குறைத்துக் கொண்டு அதையும் டாலரில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது.அத்தோடு ஐரோப்பாவில் தொடரும் பொருளாதாரத் தேக்கத்தால் யூரோவின் மதிப்பு தள்ளாட்டத்தில் உள்ளதாலும் டாலருக்கு உலகளவில் மதிப்பு அதிகரித்துவிட்டது.இது தவிர உள்நாட்டுக் காரணங்களான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் பணவீக்கமும் சேர்ந்து கொண்டு ரூபாயின் மதிப்பை சீர்குலைத்து வருகின்றன.இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய ரூபாயின் அதால பள்ளத்தை நோக்கிய பாய்ச்சல் வேகம் பிடித்து, கடந்த சில தினங்களில் பெரும் சரிவை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.இன்றைய நிலவரப்படி ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 59.9350 என்றாகிவிட்டது. அதாவது ஒரு டாலர் தந்தால் கிட்டத்தட்ட 60 ரூபாய் கிடைக்கும்.இது கடந்த ஆண்டில் 48 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இதன்மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு பெரும் லாபமும், இறக்குமதியாளர்களுக்கு பெரும் நஷ்டமும் உண்டாகும். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் என கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களை பெரும் அளவில் இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கு இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் உள்ளிட்டவற்றின் விலை மேலும் உயர்வதைத் தவிர்க்க முடியாது. இதன் விலைகள் உயர்ந்தால் உணவு, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலையும் உயரும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக