வெள்ளி, 21 ஜூன், 2013

மாவட்டத்தில் பாதுகாப்பு ஒத்திகை: 1,500 போலீஸார் பங்கேற்பு

கடலூர் :தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் ஒத்திகை பயிற்சியில் கடலூர் மாவட்டத்தில் 1,500 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கடல்வழி மார்க்கமாக நடத்தப்படும் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஆபரேஷன் ஹம்லா ஒத்திகை தமிழக முழுவதும் ஆண்டுதோறும் காவல் துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாள் ஆபரேஷன் ஹம்லா ஒத்திகை வியாழக்கிழமை தொடங்கியது.
கடலூர் எஸ்பி ஆ.ராதிகா தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி, 9 டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸார் தீவிரவாதிகள்போல் மாறுவேடத்தில் வரும் கமாண்டோக்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக முக்கிய சாலைகளில் 24 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலோர பகுதிகளில் ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோட்டை விட்ட போலீஸார்
வியாழக்கிழமை காலை ஒத்திகை தொடங்கிய நிலையில் சாலை வழியாக பஸ்ஸில் வந்த 2 பேர் கடலூர் பஸ் நிலையம் வந்து இறங்கியுள்ளனர். பின்னர் நகர் முழுவதும் சுற்றித் திரிந்த அவர்கள் முக்கிய இடங்களில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். காலை 6 மணிக்கு வந்தவர்கள் 9 மணி வரை 3 மணி நேரம் கடலூரில் சுற்றித் திரிந்தும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டும் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார் இவர்களை கண்டுகொள்ளவில்லையாம்.
 ஒத்திகையில் தீவிரவாதிகள்போல் வந்த கமாண்டோக்களை போலீஸார் பிடிக்காமல் கோட்டைவிட்டதைத் தொடர்ந்து 2 கமாண்டோக்களும் கடலூர் முதுநகர் போலீஸில் சரணடைந்தனர். இதை சற்றும் எதிர்பாராத கடலூர் மாவட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பாதுகாப்பில் கோட்டைவிட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸார் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். தொடர்ந்து ஒத்திகை வெள்ளிக்கிழமையும் நடைபெறுவதால் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

 ஆபரேஷன்'ஹம்லா ஒத்திகையின்போது தீவிரவாதிகள்போல் கடல்வழியாக படகில் ஊடுருவ முயன்ற 6 பேரை கடலூர் மாவட்ட போலீஸார் பிடித்தனர்.
கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையொட்டி சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில், சிதம்பரம்  கிள்ளை முடசல்ஓடை, பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய பகுதிகளில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடற்கரையில் பண்ருட்டி கலால் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவுமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, சந்திரபோஸ் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடல்வழியாக படகில் வந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். இவர்கள் 6 பேரும் கடல்வழியாக ஊடுருவி இரு இடங்களில் வெடிகுண்டு வைக்க நாகப்பட்டினத்திலிருந்து படகில் ஒத்திகை நிகழ்ச்சிக்கு வந்தது தெரியவந்து. பின்னர் அவர்களை போலீஸார் விடுவித்தனர்
photo:file

0 கருத்துகள்:

கருத்துரையிடுக