செவ்வாய், 18 ஜூன், 2013

தங்கம் விலை வீழ்ச்சி எதிரொலி அடகு வைத்தவர்களிடம் வங்கிகள் வசூல்

கடலூர்:தங்கம் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு பின் நகைக்கடன் கொடுத்த வங்கிகள் கடனாளிகளிடம் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன.
தங்கத்தின் விலை உயர்ந்ததால் பலர் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்தது. வங்கிகளும் தங்கத்தின் மீது கடன் கொடுக்க முன்னுரிமை அளித்தன. மார்க்கெட்டில், தங்கம் கிராம் ஒன்று 2900 ரூபாய் வரை விற்பனையானது.
அதையொட்டி, வங்கிகள் தங்கத்தின் மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் வழங்கின. அதிகபட்சமாக ஒரு கிராமுக்கு 2200 ரூபாய் நகைக் கடன் வழங்கப்பட்டது. இதனால் வங்கிகளில் ஏராளமான வர்த்தகம் நடந்தது.
இந்நிலையில், தற்போது தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் வங்கிகள் நகை ஈட்டின் பேரில் கடன் வழங்கும் தொகையை, ஒரு கிராமுக்கு 1600 ரூபாயாக குறைத்துக் கொண்டன. ஏற்கெனவே இருந்ததைவிட கிராம் ஒன்றுக்கு 900 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால், ஏற்கனவே நடந்து வந்த வியாபாரம் 50 சதவீதமாக குறைந்தது.
ஆனால் வங்கிகளுக்கு நகைக்கடனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கியில் நகை ஈட்டின் பேரில் கொடுக்கப்படும் கடன்களுக்கு ஒரு ஆண்டு கெடு வழங்கப்படுகிறது. கடன் வழங்கிய தொகையுடன் ஒரு ஆண்டு வட்டியும் சேர்த்தால் நகையின் மார்க்கெட் மதிப்பை விட கூடுதலாகிறது.
இந்த நிலையை சரிகட்ட, கடன்தாரர்களுக்கு வங்கிகள் துவக்கத்திலேயே இறுதி கட்ட நோட்டீசு வினியோகித்து வருகின்றன. மேலும், கூடுதலாகும் தொகையை வீட்டிற்கு சென்று வசூலிக்கத் துவங்கியுள்ளன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக