புதன், 12 ஜூன், 2013

தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல்! பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூல்

கடலூர்:மாவட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அடாவடியாக அரசு நிர்ணயக் கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதால், பெற்றோர்கள் திணறி வருகின்றனர்.
நாட்டிற்கு பல கல்வியாளர்களை உருவாக்கித் தந்த பழமையான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள கடலூர் மாவட்டம், கல்வியில் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் விவசாயம் போன்ற உடலுழைப்பு தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த மாவட்டத்தில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே.
இந்நிலையில், போதிய மழையின்மை, மின்வெட்டு, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் தங்கள் வாரிசுகளாவது பிற வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக கல்வி கற்க, பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்து வருகிறது.
கிராமங்களில் அரசு பள்ளிகள் இருந்தாலும், போதிய கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் பாடம் நடத்தும் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர்.
மேலும், மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு வருவதால், பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளையே நாடுகின்றனர்.
இதனையே தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ள தனியார் பள்ளிகள் பல, தங்கள் விருப்பப்படி கட்டணங்களை வசூலித்து வந்தன. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்த வந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்புகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப கட்டணம் நிர்ணயம் செய்தது.
அதன்படி இந்த கல்வி ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கான கட்டணத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலர் குழு நிர்ணயம் செய்து, இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி கட்டணத்தை வசூலிக்கின்றனர். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கு நன்கொடையும் வசூலிக்கின்றனர்.
இவ்வாறு வசூலிக்கப்படும் நன்கொடை மற்றும் கல்வி கட்டணங்களுக்கு எவ்வித ரசீதுகளும் வழங்குவதில்லை. துண்டு சீட்டுகளில் தொகையை மட்டும் குறிப்பிட்டு கொடுக்கின்றனர். அந்த தொகையை, அங்குள்ள காசாளரிடம் கொடுத்துவிட்டு வர வேண்டியதுதான். பணம் செலுத்தியதற்கான எந்த ரசீதும் வழங்குவதில்லை.
இதுகுறித்து யாரேனும் கேள்விக் கேட்டால், எங்கள் பள்ளியில் இதுதான் நடைமுறை. இஷ்டப்பட்டால் பிள்ளையை சேருங்கள். இல்லை என்றால், "டி.சி.,'யை வாங்கிச் செல்லுங்கள் என மிரட்டுகின்றனர். இதனால், வேறுவழியின்றி பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகின்றனர். ஆனாலும், போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களில் சிலர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைக்கேட்புக் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக