வியாழன், 23 ஆகஸ்ட், 2012

வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால்: பணப் பரிமாற்றம் பாதிப்பு

கடலூர், ஆக. 22: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுள்ள இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பணப் பரிமாற்றம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள வங்கிகள் சட்ட சீர்திருத்த மசோதாவையும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அரசுப் பங்குகளை நீர்த்துப் போகும் விதத்தில் தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கையும், வங்கிகளின் பணிகளை வெளியேத் தனியார்  மயம் செய்யும் நடவடிக்கைகளையும், ஊழியர்களையும், அதிகாரிகளையும் பாதிக்கிற கண்டேல்வால் கமிட்டி பரிந்துரைகள் உள்ளிட்ட செயல்களைக் கண்டித்து, கருணை அடிப்படையில் வேலை என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, நாடு தழுவிய அளவில் ஊழியர்கள், அதிகாரிகள் ஒன்றிணைந்து இரண்டு நாள்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. பண மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வங்கி வேலை நிறுத்தம் காரணமாக ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

சில ஏடிஎம் மையத்தில் புதன்கிழமை மதியமே பணம் தீர்ந்துவிட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

புதன்கிழமை ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தத்தால் மட்டும் பல கோடி ரூபாய் பரிமாற்றம் தடைப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக