
மத்திய அரசு பெட்ரோல் விலையை 2 ரூபாய் உயர்த்தினால் (நியாயப்படுத்தவில்லை) கண்டனங்களை பறக்கவிடும் தமிழக முதல்வர், பஸ் டிக்கட், பால் விலையை இரண்டு மடங்காக உயர்த்தி இருப்பது மட்டும் நியாயம் தானா? ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைப்போம் என்று கூறியவர், கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, விண்ணை முட்டும் அளவுக்கு விலைகளை உயர்த்தி இருப்பதன் மூலம், மக்களுக்கு நல்லாட்சி தருவதில் இருந்தும் விலகிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. அதுவும் திட்டமிட்டு, உயர்த்தி பொதுமக்களை ஏமாற்றிவிட்டதாகவே கருதத் தோன்றுகிறது.
எப்போதும் லாபத்தில் இயங்குவதற்கு அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்ல என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொண்டும் இவ்வாறு செயல்படுவதேன்? சென்ற ஆட்சியில் பருப்பு, அரிசி விலைகள் உயர்ந்தபோது அதற்கு மாநில அரசுதான் காரணம் என்று கூறிவிட்டு, இப்போதைய விலையேற்றத்துக்கு மத்திய அரசும், சென்ற அரசும்தான் காரணம் என்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்வார்கள். சென்ற ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நூறு கோடி திட்டங்களை முடக்குவதில் காட்டிய வேகத்தை, இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமையில் காட்டியிருந்தால் இமாலய விலையேற்றத்தை தவிர்த்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஆடு, மாடு, லேப்டாப், கிரைண்டர், பேன், மிக்ஸி போன்ற இலவசங்களுக்கென்று பலகோடி ரூபாய்களை பொதுமக்களுக்காக செலவழித்து கஜானாவை காலியாக்கிவிட்டு, அநியாய விலையேற்றத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து மீண்டும் பணம் பறிப்பது நல்லாட்சியின் அடையாளமல்ல. இலவசங்களை தாருங்கள் என்று பொதுமக்கள் கேட்பதில்லை. வரும் காலங்களில் ஆட்சியை பிடிப்பதற்காக இலவசங்களை அள்ளித் தருவதை சட்டங்கள் மூலம் சரிசெய்யவில்லை எனில், இலவசம் என்பது மக்களைப் பொறுத்த வரை விஷமாக மாறிவிடும். இலவசங்களை கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, பொதுமக்களிடமிருந்து அதை வேறுவகையில் பன்மடங்காக வசூலிப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
முன்னால் முதல்வர் கருனாநிதியின் குடும்ப ஆட்சி போன்றவற்றை முடிவுக்கு கொண்டுவந்து ஆட்சி மாற்றத்திற்காக ஓட்டளித்தவர்களின் விரல்களின் மை காய்வதற்குள் இத்தகைய சிரமத்திற்குள்ளாகியிருக்கும் தமிழக மக்கள், இன்னும் 4 வருடங்களில் என்னென்ன சிரமங்களை சந்திக்கபோகிறார்களோ என்ற பயம் தமிழக மக்களை கவ்விக் கொண்டுள்ளது. தவறு செய்தவர்களை எதிர்கட்சி வரிசையில் கூட அமரவிடாமல் செய்தவர்கள் தமிழக வாக்காளர்கள் என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா மறந்து விடவேண்டாம். பொதுமக்களுக்கு சிரமமில்லாத வகையில் தமிழக முதல்வர் நல்லாட்சி கொடுக்க வேண்டும். இல்லைஎனில், அடுத்த தேர்தலில் மக்கள் இந்த அரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக