சனி, 11 ஆகஸ்ட், 2012

எந்திர கோளாறு.. துபாய் விமானத்தில் 5 மணி நேரம் உட்கார வைக்கப்பட்ட பயணிகள்!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட மிகவும் தாமதமானதால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு துபாய்க்கு செல்ல எமிரேட்ஸ் விமானத்தில் 369 பயணிகள் காலை 9.30 மணிக்கு ஏறி அமர்ந்தனர்.
அப்போது திடீரென, விமானத்தில் சிறிய எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதால், பழுதை சரி செய்த பின்னர் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 4 மணி நேரம் கழிந்த பின்னரும் பகல் 2 மணி வரை அந்த விமானம் புறப்படவில்லை.
அதே நேரத்தில் பயணிகளை விமானத்தை விட்டு இறங்கவும் அனுமதிக்கவில்லை. இதனால் கடுப்பான பயணிகள் 4 மணி நேரத்துக்கும் மேலாக விமானத்தில் தங்களை அமர வைத்து கஷ்டப்படுத்துவது ஏன் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் வந்து பயணிகளை சமாதானம் செய்ய முயன்றனர்.
ஆனால், விமானம் எப்போது தான் தயார் ஆகும் என பயணிகள் கேட்ட கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அதிகாரிகள் விமானம் நள்ளிரவில் தான் புறப்பட்டு செல்லும். அதுவரை பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள் என கூறி விமானத்தில் இருந்து அனைவரும் கீழே இறக்கினர். பின்னர் பஸ்களில் ஏற்றிச் சென்று பயணிகளை நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்தனர்.
பின்னர் அவர்களை வேறு விமானத்தில் துபாய்க்கு அனுப்பி வைத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக