செவ்வாய், 24 ஜூலை, 2012

சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்!

டெல்லி: சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க மத்திய திட்டக் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த எதிர்ப்புக்கு முக்கியக் காரணம், சென்னை விமான நிலையம் நாட்டுக்கு ஈட்டித் தந்து வரும் பெரும் வருமானம் தான்.
இந்தியாவிலேயே மிக அதிகமான வருவாயைக் கொண்டு வரும் விமான நிலையங்கள் சென்னையும், கொல்கத்தாவும் தான். இதையடுத்து இதை ஏற்று நடத்த பல தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையுமே தனியார்மயமாக்கும் பிரதமர் மன்மோகன் சிங் டீமைச் சேர்ந்த முக்கிய நபரான மாண்டேக் சிங் அலுவாலியா தான் இப்போதைய திட்டக் கமிஷன் தலைவர். அவரிடமிருந்து சென்னை விமான நிலையமும் தப்பவில்லை.
ஆனால், அவரிடமிருந்து சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களைக் காத்து தாங்களே பராமரிந்து நடத்த இந்திய விமான நிலைய ஆணையம் மிகவும் ஆர்வமாக உள்ளது.
தனியார் வசம் போன ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களில் விமானக் கட்டணம் தவிர விமான நிலையக் கட்டணம் என்ற பெயரில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 1,000 வரை பறிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையம் தனியார்மயமானால் இதே நிலை தான் இங்கும் ஏற்படும்.
சென்னை விமான நிலையத்தை ரூ. 2,100 கோடி செலவில் இந்திய விமான நிலைய ஆணையம் புதுப்பித்துள்ளது. அதே போல கொல்கத்தா விமான நிலையத்தை புதுப்பிக்க ரூ. 2,350 கோடியை செலவிட்டுள்ளது. இதில் புதுப்பிக்கபட்ட சென்னை விமான நிலையம் அடுத்த மாதமும் கொல்கத்தா விமான நிலையம் அக்டோபர் மாதமும் திறக்கப்படவுள்ளன.
இந் நிலையில் தான் இந்த விமான நிலையங்களைப் பராமரிக்க public private partnership (PPP) என்ற பெயரில் தனியாரை நுழைக்க திட்டக் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங்கும் ஆதரவாக உள்ளார்.
ஆனால், தங்களுக்கு குறைந்த வட்டியில் பணம் கிடைத்தால் அல்லது ரூ. 4,000 கோடிக்கு பங்குகள் மூலம் பணம் திரட்ட அனுமதித்தாலே போதும். இந்த விமான நிலையங்களையும் நாங்களே நடத்துவோம் என்கிறது இந்திய விமான நிலைய ஆணையம். ஆனால், இதற்கான அனுமதிகள் இன்னும் தரப்படவில்லை.
தனியார் தான் விமான நிலையங்களை சிறப்பாக நடத்துவார்கள் என்றால் அவர்களை விட்டு புதிதாக விமான நிலையங்களை கட்ட வேண்டியது தானே?. ஏன் ஏற்கனவே அரசுப் பணத்தில் கட்டிய விமான நிலையங்களை பராமரிப்பு என்ற பெயரில் அவர்களிடம் தந்து, தனியார் பணம் ஈட்ட உதவ வேண்டும் என்று கேட்கிறது இந்திய விமான நிலைய ஆணையம்.
இதுக்குப் பெயர் தானே தனியார்மயம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக