செவ்வாய், 24 ஜூலை, 2012

பெட்ரோல் விலை 89 காசு உயர்வு

புதுடெல்லி : நாடு முழுவதும் பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 70 காசு உயர்த்தப்பட்டது. சென்னையில் வரியுடன் லிட்டருக்கு 89 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் விலை ரூ.73.16 ஆனது. பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் எண்ணெய் நிறுவனங்களிடம் அளித்தது. இதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, பலமுறை விலை உயர்த்தப்பட்டது.


கடந்த முறை நாடாளுமன்ற தொடர் முடிந்த மறுநாள், மே 23ம் தேதியன்று, இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டது. சென்னையில் விலை ரூ.77.53 ஆனது. பெட்ரோல் விலையை ஒரே தடவையில் ரூ.7.50 உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. எதிர்க்கட்சிகள் பந்த் நடத்தின.

இதற்கிடையே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. அதற்கேற்ப கடந்த மாதம் 3ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.68 குறைக்கப்பட்டது. பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்ததால் ரூபாய் மதிப்பு சரிவை கணக்கிட்டு ஒரே மாதத்தில் 2வது முறையாக கடந்த 29ம் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.46 வரை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.

அதன்படி, ரூ.2.46 விலை குறைப்புடன் அதற்கான வரியும் நீங்கி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.13 விலை குறைந்தது. சென்னையில் லிட்டர் ரூ.72.27 ஆக இருந்தது. இந்த நிலையில், பெட்ரோல் விலையை நேற்று நள்ளிரவு முதல் 70 காசு உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. அதற்கான வரி சேர்த்து சென்னையில் 89 பைசா அதிகரித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக