புதன், 11 ஜூலை, 2012

மூதாட்டியைத் தாக்கி திருட முயன்ற வாலிபர் கைது

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மூதாட்டியைத் தாக்கி திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் இஸ்லாம்ஷா தெருவைச் சேர்ந்தவர் செகருன்னிசா, 70. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருக்கும் போது அடையாளம் தெரியாத மூன்று பேர் குடிக்க தண்ணீர் கேட்டனர். தண்ணீர் எடுத்து வருவதற்குள் மூவரும் வீட்டிற்குள் புகுந்து செகருன்னிசாவின் வாயைப் பொத்தி தாக்கித் திருட முயன்றனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இரண்டு பேர் மோட்டார் பைக்கில் தப்பியோடினர். ஒருவரை மட்டும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர், குறிஞ்சிப்பாடி சுப்ராயர்கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஜெகதீஷ் என்பதும், தப்பியோடியவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன், ரமேஷ் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து ஜெகதீஷை, 24, கைது செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக