புதன், 11 ஜூலை, 2012

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனபுதுடெல்லி;ஏழ்மை, குரூர குணம், போன்ற காரணங்களால், குழந்தைகள் கொலை செய்யப்படுவதும், சித்ரவதை செய்யப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் இந்தியாவில் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளுக்கு எதிராக சமீபத்தில் நடந்த சில கொடுமைகள் நெஞ்சை பதர வைக்கின்றன.

மேற்கு வங்க மாநிலம், பெஹ்ராம்பூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சிபுசிங், குடும்ப வறுமை காரணமாக, அங்குள்ள வர்த்தகர் கிஷோர் பகத் என்பவர் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனுக்கு அங்கு அரை வயிறு உணவாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறுவனை பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதற்கு மாறான நிலமையே அங்கு இருந்தது சிறுவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டினர். திறந்த பால்கனியில் தூங்கச் செய்தனர். சிறு தவறுகளுக்குகூட கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. வீட்டுக்காரர்களிடம் சிறுவன் தினமும் அடி வாங்கினான்.

நேற்று முன்தினம் மளிகை கடைக்கு சென்றுவர தாமதமானதால் சிறுவன் சிபுசிங் அடித்தும், சூடு வைத்தும் சித்ரவதை செய்யப்பட்டான். இதை அறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று சிறுவனை மீட்டது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டதும், கிஷோர் பகத் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியின் விடுதியில் 10 வயது சிறுமி தங்கி படித்து வந்தாள். அவள் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள் என்பதற்காக, சக மாணவ-மாணவிகள் முன்னிலையில், அந்த சிறுமியை சிறுநீர் குடிக்க செய்து, பெண் வார்டன் சித்ரவதை செய்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்தது.

சம்பந்தப்பட்ட பெண் வார்டன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடப்பட்டார். இதுபற்றி, பிரதமர் அலுவலகமும் விளக்கம் கோரியுள்ளது நினைவிருக்கலாம்.

கான்பூர் அருகே உள்ள பர்மாத் என்ற இடத்தில் செயல்படும் தொடக்க பள்ளிக்கு, சரியான கட்டிட வசதி கிடையாது. இருக்கும் கட்டிடத்துக்கும், உடைந்துபோன கூரைதான் உள்ளது.

மழைக்காலங்களில் வகுப்பறைகள் வெள்ளக்காடாக மாறிவிடும். அப்போது மாணவ, மாணவிகள் கைகளில் துடைப்பமும் வாளியும் கொடுக்கப்படும். வகுப்பறையில் தேங்கி நிற்கும் மழை நீரை அவர்கள்தான் அப்புறப்படுத்த வேண்டும். பின்னர், ஈரத் தரையில் அமர்ந்து பாடம் படிக்க வேண்டும். அப்படியும் ஈரம் குறையவில்லை எனில், விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

வேலை செய்ய தயங்கும் சிறுவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பர். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் இருந்தும் இதுபோன்ற பள்ளிகளில் சிறுவர், சிறுமிகள் சம்பளமில்லா துப்புறவு பணியாளர்களாக வேலை செய்கின்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை சேர்ந்த ரமேஷ் குமார், சாக்ஷி தம்பதிகள் மீனா என்ற சிறுமியை தத்து எடுத்து வளர்த்தனர். தற்போது ஏழு வயதாகும் அந்த சிறுமியை வளர்ப்பு தந்தையே கற்பழிக்க முயன்றார். இதனால் வெறுப்படைந்த சாக்ஷி, வளர்ப்பு மகள் மீனாவை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார்.

காய்கறி நறுக்கும் கத்தியால் குத்தி மீனாவை கொலை செய்தார். ஆனால், சாக்ஷி பின்னர் மனம் மாறி தற்கொலை முடிவை கைவிட்டார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதுபோன்று, இந்தியாவில் பல மாநிலங்களில் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக