கடலூர் : கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள்
இயங்காததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். அதனைத் தொடர்ந்து அரசு
போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடலூர் மற்றும் சுற்று
வட்டாரத்தைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார்
நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தினசரி கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்களில் சென்று வருகின்றனர். இதன்
காரணமாக தினசரி காலை 8 மணி முதல் 9.30 மணிவரையில் புதுச்சேரி செல்லும் பஸ்களில்
பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் புதுச்சேரியில் தொழில் நுட்ப உயர்
கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீடு வழங்கியதைக் கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும்
பல்வேறு இயக்கங்கள் சார்பில் நேற்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதனால், தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. இதன் காரணமாக கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இதனால், புதுச்சேரியில் வேலை செய்பவர்கள் குறிப்பாக பெண்கள் நேற்று வேலைக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். ஆண்கள் பலர் தங்களது மோட்டார் சைக்கிளிலேயே புதுச்சேரிக்குச் சென்றனர். புதுச்சேரியில் "பந்த்' நடைபெறுவதை அறியாமல் ஊருக்குச் செல்ல வந்த பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் புதுச்சேரி பஸ்சுக்காக இங்கும், அங்குமாக அலைந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
புதுச்சேரிக்கு பயணிகள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், புதுச்சேரிக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடலூரில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக சென்ற அரசு பஸ்கள் அனைத்தும் புதுச்சேரி மாநில எல்லையான முள்ளோடையில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்கிருந்து புதுச்சேரி மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றனர். அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை சற்று சீரடைந்தது. மாலை 5 மணிக்கு பிறகு கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் இயங்கின.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக