பரங்கிப்பேட்டை ; தனியார் அனல் மின் நிலையத்தினர் கடல் வளத்தையும், மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள்,
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்து வருகின்றனர் என எம்.எல்.ஏ.,
பாலகிருஷ்ணன் பேசினார்.தனியார் அனல்மின் நிலையங்களுக்கு தடை விதிக்கக் கோரி இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது.
கடலூர் கடலோர வாழ்வுரிமை அமைப்பாளர் ரமேஷ்பாபு, மா.கம்யூ., ஒன்றிய செயலர் கற்பனை செல்வம், கொத்தட்டை ஊராட்சித் தலைவர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தை துவக்கி வைத்து சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசியதாவது:
கடலூர் மாவட்ட கடற்கரையோர பகுதிகளில் மூன்று அனல் மின்நிலையங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை, சாயப்பட்டறை ஆலை மற்றும் மூன்று துறைமுகங்கள் போன்றவை வர உள்ளது. இந்நிறுவனங்கள் வருவதற்கு முன்பே சட்ட விதி மீறல்களில் நடக்கிறது.
குறிப்பாக ஐ.எல்.எப்.எஸ்., தனியார் அனல்மின் நிலையம் புகழ்பெற்ற பக்கிங்காம் கால்வாயின் இருபுற கரைகளை சேதப்படுத்தி பாலம் அமைத்துள்ளது.
கம்பெனியின் தண்ணீர் தேவைக்கு கடல் நீரை மட்டும் பயன்படுத்துவோம் என ஒப்பந்தம் செய்து, விதிகளை மீறி ஆழ்குழாய் கிணறு அமைத்து நிலத்தடி நீரை எடுக்கின்றனர். இதனால் கடல் நீர் உட்புகுந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மொத்தத்தில் இப்பகுதியில் கடல் வளத்தையும், விவசாய தொழிலையும் நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்து வருகின்றனர்.
இவ்வாறு எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக