கடலூர்: வரும் 2013-ம் ஆண்டுக்குள் கடலூர் மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக திகழும் என மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ சனிக்கிழமை தெரிவித்தார்.கடலூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம், கிரீன் கிராஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மாபெரும் துப்புரவுப் பணியை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் தொடங்கினார். இப்பணியை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ துவக்கிவைத்து கடற்கரையில் இருந்த குப்பைகளை சேகரித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடலூர் மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 26.6.2012-ல் அப்துல்கலாம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் துப்புரவு இயக்கத்தின் சின்னத்தை வெளியிட்டார். மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் துப்புரவுப் பணி நடைபெற்று வருகிறது.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குப்பைகளை பிரித்து உரமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பொது மக்களிடம் அறிவுறுத்தப்படுகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சியில் ஒரு வார்டை குப்பை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத மாதிரி வார்டாக தேர்வு செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர் ஆகியோரின் முழு ஒத்துழைப்புடன் 2013-க்குள் கடலூர் மாவட்டத்தை குப்பை மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும் என ஆட்சியர் ராஜேந்திரரத்னூ தெரிவித்தார்.
கடலூர் நகராட்சி ஆணையர் விஜயகுமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜ், கிரீன் கிராஸ் அசோசியேஷன் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக