கடலூர் :கால்நடை துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் அழகன். ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர்கள் சேரன், வீரபாண்டியன், சரவணன். சிதம்பரம் விஎஸ்ஆர் நகரை சேர்ந்தவர் பரணிதரன் (28). இவர், கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை டாக்டராக சிதம்பரத்தில் பணியாற்றி வருவதாகவும், சம்பந்தப்பட்ட துறையில் சிறப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகள் தன்னால் வாங்கி தர முடியும் என தமிழ் அழகன் தரப்பினரிடம் கூறியுள்ளார். இதற்காக அவர்களிடம் இருந்து ரூ.13.8 லட்சம் பெற்றுக்கொண்டார். அதற்கு சாட்சியாக அரசு கால்நடை டாக்டராக பணியாற்றி வருவதற்கான லெட்டர் பேடில் சீல், கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். ஆனால் பரணிதரன் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தமிழ் அழகன் தரப்பினர் பரணிதரன் மீது போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி பரணிதரனை கடலூர் பஸ் நிலையத்தில் நேற்று கைது செய்தனர். பரணிதரன் 10வது பெயிலானவர் என்றும், கால்நடை டாக்டர் என்று கூறி பலரிடம் சம்பந்தப்பட்ட துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் வரை மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக