வெள்ளி, 6 ஜூலை, 2012

ஊசலாடும் முதல்வர் பதவி : கர்நாடக அரசியலில் உச்சகட்ட குழப்பம் பா ஜ க திணறல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபெங்களூர் :கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவின் நிர்பந்தத்தால், முதல்வர் பதவியில் இருந்து சதானந்தா மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியான நிலையில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘முதல்வரை மாற்றும் விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம்’ என பாஜ மேலிடத்தை சதானந்தா எச்சரித்துள்ளார். இதனால் முதல்வர் மாற்றப்படுவாரா என்று உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை மாற்ற வலியுறுத்தி முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவு அமைச்சர்கள் 9 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். கவுடாவுக்கு பதில் ஜெகதீஷ் ஷட்டரை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பாஜ மேலிடத்தின் சமரசத்துக்கு பின்னர் அவர்கள் ராஜினாமா கடிதங்களை வாபஸ் பெற்றனர். இதை தொடர்ந்து சதானந்த கவுடா மற்றும் எடியூரப்பா ஆதரவாளர்களை டெல்லிக்கு வரவழைத்த பா.ஜ. தலைவர் நிதின் கட்கரி, அவர்களுடன் தனித்தனியாக பேச்சு நடத்தினார். எடியூரப்பாவுடன் அருண் ஜெட்லி தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் சதானந்த கவுடாவுக்கு பதில் ஜெகதீஷ் ஷட்டரை முதல்வராக்குவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. இதை சதானந்த கவுடாவும் ஏற்று கொண்டதாக பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்தன. சதானந்த கவுடாவுக்கு மாநில பாஜ தலைவர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், வரும் 10ம் தேதிக்குள் கர்நாடக முதல்வராக ஜெகதீஷ் ஷட்டர் பொறுப்பேற்பார் எனவும் பெங்களூர் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் முதல்வரை மாற்றும் விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என மேலிட தலைவர்களுக்கு சதானந்த கவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கோலாரில் நடைபெற்ற விழா ஒன்றில் சதானந்த கவுடா பேசியதாவது: கர்நாடக மாநில பாஜ தலைவராக நான் இருந்த போதுதான் பாஜ ஆட்சியை பிடித்தது. தென்னிந்தியாவில் முதல் முறையாக பாஜ ஆட்சி பிடித்ததில் எனக்கும் பங்கு உள்ளது. முதல்வரை மாற்றும் விஷயத்திலும், துணை முதல்வர் பதவி உருவாக்கும் விஷயத்திலும் மேலிட முடிவுக்கு கட்டுப்பட தயாராக இருக்கிறேன். ஆனால் முதல்வரை மாற்றும் விஷயத்தில் அவசரம் காட்ட கூடாது. அவசரப்பட்டு கொண்டு வரப்படும் எந்த மாற்றத்தையும் மக்கள் ஏற்க மாட்டார்கள். அப்படி ஒரு மாற்றம் வந்தால் மக்கள் சரியான தண்டனை கொடுப்பார்கள். இவ்வாறு சதானந்த கவுடா பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக