சென்னை: சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை 6 வழிப்பாதையாகிறது. முதல் கட்டமாக திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை 10.5 கிமீ தூரம் அகலப்படுத்தப்படுத்தும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை நகரையொட்டி பல்வேறு சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், பொழுது போக்கு தலங்கள், ரெசார்ட்டுகள், பண்ணை வீடுகள், ஐ.டி நிறுவனங்கள் அமைந்துள்ளன. தவிர கிழக்கு கடற்கரை சாலையையொட்டி மகாபலிபுரம், கல்பாக்கம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் உள்ளன. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதியில் நிலம் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வாகன பெருக்கம், சாலை பயன்பாட்டை கருத்தில் கொண்டு, கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிப்பாதையாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை 10.5 கிமீ சாலை முதலில் 6 வழிப்பாதை ஆக்கப்படுகிறது. இப்பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கும் என்று தெரிகிறது. சாலை அகலப்படுத்தும் பணிக்காக திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை உள்ள பகுதியில் நிலம் கையகப்படுத்துதல், கட்டிடங்களை இடித்தல், இடிக்கப்படும் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.354 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த சாலையில் வசிக்கும் 700 பேருக்கு ரூ.10 கோடி இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டு, அவர்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இழப்பீட்டு தொகையை வழங்கிய பின்னரே கையகப்படுத்துதல் மற்றும் பணிகள் தொடங்கப்படும் என்ற கொள்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. புதிதாக அமையும் 6 வழிப்பாதையானது 100 அடி வரை இருக்கும் என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் 50 முதல் 80 அடி வரை இடம் தேவைப்படுகிறது. மேலும் சாலை ஒரே மாதிரியாக 30.5 மீட்டரில், அகலமாக அமைக்கப்பட உள்ளதால் தேவையான இடத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மற்ற நெடுஞ்சாலைகளை போல் இல்லாமல், கிழக்கு கடற்கரை சாலையில் சென்டர்மீடியன்கள் இல்லாமல் இருந்தது. விபத் தில் உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க சென்டர்மீடியன் வைக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் கோரி வந்தனர். அதை ஏற்று பல இடங்களில் சென்டர்மீடியன்கள் வைக்கப்பட்டன. அதன்பின் ஓரளவுக்கு விபத்துகள் குறைந்துள்ளன. எனினும், கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை தடுக்க சென்டர் மீடியன் 1.2 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. தவிர சாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல தனிப்பாதை, மழைநீர் கால்வாய் போன்றவையும் அமைக்கப்படுகிறது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக