துபாய் : துபாயிலிருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஜுன் 30 ஆம் தேதி வரை புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களுக்கான சேவையினை ரத்து செய்துள்ளதால் பயணிகள் பரிதவிக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளது.பயணி ஒருவர் துபாயிலிருந்து திருச்சி செல்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இணையத்தளம் வழியே முன்பதிவு செய்திருந்தார். விடுமுறையில் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களைக் காண ஆவலுடன் இருந்து வந்தார்.
இச்சூழ்நிலையில் பிறிதொரு விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவரது நண்பர் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது சேவையினை ஜுன் 30 ஆம் தேதி வரை புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் ரத்து செய்துள்ள தகவலை தெரிந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு ஏஜெண்டான அல் மஹா டிராவல்ஸுக்கு சென்றார். அங்குள்ள ஊழியர்களிடம் இது குறித்து விசாரித்த போது அவர்கள் ஆம் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் ஜுன் 30 வரை சேவையில்லை.
அதற்காக முழுக்கட்டணத்தை திரும்பப் பெறலாம் அல்லது அடுத்த விமானத்தில் செல்லாம் என்றனர். விமான சேவை ரத்து செய்யப்பட்ட தகவல் பயணிகளுக்கு அனுப்பவில்லையே எனக் கேட்டபோது இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தான் பயணிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
அதனையடுத்து தனது பயணத்திட்டத்தை மாற்றிக் கொண்டு திரும்பினார். இவரது நண்பர் மூலம் தெரிந்ததால் தனது பயணத்திட்டத்தை முன்பே திட்டமிட வசதியாக இருந்துள்ளது. இதுகுறித்து விபரமறியாத பயணிகளின் பாடு பெருந்திண்டாட்டம் தான்.
தொடர்ந்து பயணிகளை அவஸ்தைக்குள்ளாக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக